கலாநிதி. றவூப் ஸெய்ன்
உண்மையில் சோல்பரி யாப்பின் மூலம் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையே (பாராளுமன்றம்) இலங்கையின் முதல் பாராளுமன்றமாகக் கருதப்படவேண்டும். அதன் படி கடந்த பொதுத்தேர்தல் என்பது 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் அல்ல. மாறாக பதினேழாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஆகும். இது நமது பிரதிநிதித்துவ அரசியல் வரலாற்றில் 17 ஆவது பாராளுமன்றமாகும்.
1947 முதல் 1952 வரை இயங்கிய இலங்கையின் முதல் பாராளுமன்றத்தில் மொத்தம் 101 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். அதில் ஆறு உறுப்பினர்கள் முஸ்லிம்கள் .அவர்களிலிருந்து டி.பி. ஜாயா அவர்கள் தொழில் சமூக சேவை அமைச்சராக பதவி வகித்தார். முதல் சட்ட நிரூபண சபையின் முஸ்லிம் உறுப்பினர் எம்.ஸி அப்துர்ரஹ்மான் என்பது போல் எமது முதல் முஸ்லிம் அமைச்சர் என்ற பெருமை ஜாயா அவர்களையே சாரும்.
இரண்டாவது பாராளுமன்ற தேர்தல் 1952 இலும் பதினாறாவது பாராளுமன்ற தேர்தல் 2020 இலும் நடந்தது. இந்த அத்தனை தேர்தல்களிலும் முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகினர்.அவர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். அதிதீவிர வலதுசாரி தேசிவாதிகளான ராஜபக்ஷர்களின் ஆட்சியின் அமைச்சரவையில்கூட முஸ்லிம்கள் பதவி வகித்துள்ளனர். அத்தகைய அமைச்சுப் பதவிகளால் சமூகத்துக்கு என்ன ஆனது? ஒன்று மில்லையே !ஆக எதற்காக அத்தகைய அமைச்சுப் பதவிகள் என தேசிய மக்கள் சக்தியின் தீவிர ஆதரவாளர்கள் கேளிவி எழுப்பலாம்.
நான் கூட கடந்த கால முஸ்லிம் அமைச்சர்களால் எதுவும் ஆகவில்லை என்பது குறித்து எழுதியுள்ளேன். இங்குள்ள விஷயம் அதுவல்ல. ஒரு புதிய, புரட்சிகரமான, மக்கள் எதிர்பார்ப்பைக்கொண்ட, ஊழலற்ற, மக்கள் நல அரசாங்கம் என எதிர்பார்க்கப்படுகிற, ஓர் அரசாங்கத்தில், அனைவரும் இனமத பேதமின்றி சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று முழங்குகின்ற ஒரு அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஒரு முஸ்லிமும் இடம் பெற்றிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
சிங்கள பௌத்தர்,கிறிஸ்தவர் ,தமிழ் இந்து என மூன்று இனத்தவர்களும் மதத்தவர்களும் பங்கேற்கும் இந்த அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் இருந்திருந்தால் தேசிய மக்கள் சக்தி பற்றிய முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை மேலும் கட்டியெழுப்பலாம் என்பது எனது அவதானம். இனம் மதம் எதையும் பார்க்கவில்லை .இது தேசிய அரசாங்கம் என்று சொல்லி இதை எளிதில் கடந்து செல்ல முடியாது. தேசிய நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு தேசிய ஒருமைப்பாடு என்பவற்றின் அடித்தளம் பங்குபற்றல் ஜனநாயகமே( Participatory democracy).
பன்மைப்பாங்கு Pluralism என்பது ஒரு கள உண்மை என்றால் இந்தப்பங்கேற்புக்கான வாய்ப்பு முக்கியமானது . பன்மைகள் அழகானவை நன்மையானவை. We together என்பதன் யதார்த்தம் இதுதான். எனக்குத்தெரியும் என்.பி.பி தீவிர ஆதரவாளர்கள் இதனை ஏற்கார் என்று .ஆனால் எனக்கு ஏதோ ஒன்று தவறிப்போனதுபோலவே உள்ளது.
