உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அடுத்த சாட்சி விசாரணை அமர்வில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள சாட்சி விசாரணைகளுக்காக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஐவர் அழைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அந்த விசாரணைத் தகவல்களை பதிவுசெய்ய ஊடகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாதென விசேட தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன் விசேட தெரிவுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஏகமனதாக மேற்கொண்டுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
எனவே சாட்சி விசாரணைக்காக சமூகமளிக்கும் எந்தவொரு அதிகாரியையும் நிழற்படம் எடுப்பதற்கு அல்லது ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் அடையாளம் பகிரங்கப்படுத்தப்படுவதால், அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பல்வேறு தரப்புகளும் விமர்சித்து வருவதாக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் இதுவரையில் வெற்றிகரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதி சபாநாயகர், தொடர்ந்தும் அநாவசிய குற்றச்சாட்டுகளுக்கு இலக்காவதற்கு அல்லது குழுவின் நடவடிக்கைகள் குறித்து சமூகத்தில் அவநம்பிக்கை ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

