இலங்கை மக்கள் அனைவரும் தமக்குள் பிளவுபடாமல் ஒற்றுமையாக வாழ வேண்டுமென அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கரான கலகம அத்ததாஸ்ஸி தேரர் (Galagama Aththadhassi Thera)தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தம்மைச் சந்திப்பதற்கு வருகை தந்தவர்களும் அண்மையில் பதவியைத் துறந்தவர்களுமான முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே,அவர் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் குழு, நேற்றைய தினம் பௌத்த மகா நாயக்கர்களைச் சந்தித்துள்ளது.
தமது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கும் வகையிலேயே இந்தச் சந்திப்பை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பின் போதே, முஸ்லிம் தலைமைகளுக்கு அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கரான கலகம அத்ததாஸ்ஸி தேரர் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளமை சுட்டிக் காட்டத் தக்கது.
இதேவேளை, தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பௌத்த மகாநாயக்கர்களிடம் நேற்றைய தினம் தெரிவித்துள்ளதாக, அவரது ஊடகப்பிரிவு கூறுகின்றது.
மேலும், எந்த விசாரணைக்கும் தாம் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அவர் அந்தச் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளதாகவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதுவில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை முஸ்லிம் சமூகம் காட்டிக்கொடுக்க முனைந்த போது,அவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை அளிக்க முன் வந்ததுடன், காட்டிக்கொடுக்க வேண்டாமென
கெஞ்சியதாகவும், எனினும்,சாய்ந்தமருது மக்கள் பயங்கரவாதிகளை அரசாங்கத்திடம் அடையாளம் காட்டியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பௌத்த மகாநாயக்கர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிட்த் தக்கது.

