உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் சூத்திரதாரி உள்ளிட்ட 6 பேர் தமிழகத்தின், கோயம்புத்தூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் நேற்று நடத்திய தேடுதலின்போதே இந்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன.
சூத்திரதாரியாக கருதப்படும் 32 வயதான அசாருத்தீன் என்பவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானின் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளார் என்பதையும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன், கைதுசெய்யப்பட்டுள்ள ஆறு பேரும் தடைசெய்யப்பட்ட ஐ.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்களை பேஸ்புக் ஊடாக ஊக்குவித்து வந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சமூக வலைதளங்கள் ஊடாக இவர்களிடம் சிக்குகின்ற இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து, தென்னிந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாடு பிராந்தியங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கும் இவர்கள் தூண்டியுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

