இலங்கையில் அறிமுகமாகவுள்ளது பெண்களுக்கு மட்டும் பேருந்துச் சேவை!

0

இலங்கையில் மகளிர் மட்டும் என்ற பஸ் சேவையை விரைவில் ஆரம்பிக்கப் போவதாக போக்குவரத்து, சிவில் விமான சேவைகள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்காவின் ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற மேற்படி அமைச்சுக்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தின்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தின்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், காங்கேசன் துறை மற்றும் தலை மன்னாரிலிருந்தான புகையிரத சேவையை விரிவுப்படுத்த வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார்.
மேலும், எமது நாட்டில் பொது போக்குவரத்துகளில் ஈடுபட்டுள்ள வாகனங்களை விட சொந்த வாகனங்கள் சிறந்த வசதிகளை கொண்டவையாக இருக்கின்றன என்றும் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வன்னி மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையிலும் போக்குவரத்திலும் பின்தங்கிய நிலையிலும் காணப்படுகின்றது என்றார்.
இதனால் பாடசாலை, அலுவலகம், வைத்தியசாலை, ஆகியவற்றுக்கு மக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்றும் இதனைக் கருத்திற்கொண்டு வன்னியில் போக்குவரத்து துறை முன்னேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக மன்னார் புத்தளம் வீதியூடாக பஸ் சேவை அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விவாதத்தின்போது கருத்துரைத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா, வன்னி மக்கள் பல காலமாக வீதிகளில் நடந்தே காலத்தைக் கழிப்பதாக சுட்டிக்காட்டினார்.
“கொழும்பிலும் அதனை அண்டியப் பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிட்டு வருவதாக அண்மையில் ஒரு தகவல்கள் குறிப்பிடுகின்றது. இங்கே, போக்குவரத்து வசதிகள் இருந்தும், வாகன நெரிசல்கள் காரணமாக இந்த நிலை இம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அதேநேரம், வடக்கு மாகாணத்திலே – குறிப்பாக வன்னிப் பகுதியிலே எமது மக்கள் போக்குவரத்து வசதிகளின்மை காரணமாக தங்களது வாழ்நாளில் பல வருடங்களாக வீதிகளில் நடந்தே காலத்தைக் கழித்து வருகின்றனர்.” என்றார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top