இணையத்தில் விற்க முயன்ற சிறுத்தையின் பல் மற்றும் யானைத் தந்தப் பொருட்களுடன் ஒருவர் கைது!

A. R. M. Majeed
0

 




​இணையவழியில் விற்பனை செய்வதற்காகப் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த சிறுத்தையின் பல் பதித்த பதக்கம், யானைத் தந்த மோதிரம் மற்றும் யானைத் தந்தத்தால் தயாரிக்கப்பட்ட தாயத்து ஆகியவை நீண்டகால விசாரணைக்குப் பிறகு வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


​இணையம் ஊடாக விற்பனை செய்யத் தயாராக இருந்த சிறுத்தையின் பல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, பணஹடுவ அலுவலக வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கினர். 


அதற்கமைய மாத்தறை - கரட்டியாவல பகுதியில் உள்ள வீடு ஒன்று அடையாளம் காணப்பட்டு, வனவிலங்கு அதிகாரிகளால் இன்று (14) அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.


​இதன்போது, சிறுத்தையின் பல் பதித்த பதக்கம், யானைத் தந்த மோதிரம் மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தாயத்து உள்ளிட்ட, வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் விலங்கு பாகங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


​சந்தேக நபர் மற்றும் வழக்குப்பொருட்கள் இன்று (14) மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சந்தேக நபரை வரும் 21ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


​வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட விலங்கு பாகங்களை தம்வசம் வைத்திருத்தல், காட்சிப்படுத்துதல், கொண்டு செல்லுதல் மற்றும் வியாபாரம் செய்தல் ஆகியவை சட்டவிரோதமாகும். 


இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்களை 1992 என்ற வனவிலங்கு அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


​உடவத்தை தேசிய பூங்காவின் பணஹடுவ வனவிலங்கு அடிவட்டப் பாதுகாப்பு அலுவலக பொறுப்பதிகாரி கே.டி. நதீஷ முதுகெளும அவர்களின் தலைமையில், வனவிலங்கு ஒழுங்குபடுத்துநர் எஸ்.எச்.டி. மதுரங்க, கள உதவியாளர்கள் என்.வி.ஆர். புதிக, கே.டி.எச். சனத், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கசுன் எரங்க, எம்.டி. சந்தருவன், கே.ஜி.எஸ்.எஸ். தில்கான் மற்றும் சாரதி பி.எஸ்.எஸ்.கே. பத்திரனகே உள்ளிட்ட அதிகாரிகளால் இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top