விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல, வெலிவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொகுசு வீடு தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, சமூக ஆர்வலர் அபீத எதிரிசிங்கவினால் இலங்கை பொலிஸாரின் 1818 விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இலக்கத்தின் ஊடாகவே அபீத எதிரிசிங்க இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
அந்த முறைப்பாட்டின்படி, இந்த வீடு கடுவெல வெலிவிட்ட வீதி, ஜுசே மாவத்தையில் 30 பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி வீடாகும்.
‘டார்க் ரூம்’ (Dark Room) எனும் யூடியூப் அலைவரிசையினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மேற்கோள் காட்டி எதிரிசிங்க குறிப்பிடுகையில், குறித்த காணியின் பெறுமதி மாத்திரம் 30 மில்லியன் முதல் 51 மில்லியன் ரூபா வரை இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சொத்து அமைச்சரின் மகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னரான தேர்தல் காலங்களில் “ எங்களிடம் செலவுக்கு கூட போதிய பணமில்லை, நண்பர்களிடம் வாங்கித்தான் செலவு செய்வோம்” என்று மேடைகளில் கூறிய அமைச்சருக்கு திடீரென மூன்றுமாடி சொகுசு வீடு என்பது பலராலும் சந்தேகிப்படுவதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பெட்டாவில் காற்சட்டை துணி வாங்க வந்ததாக முகப்புத்தகத்தில் பதிவிட்டதும் இதே அமைச்சரே.
உங்களுக்கு தெரிந்த யாரேனும் சிறிய காலத்திலேயே பணக்காரன் ஆனால் உடனே 1818 க்கு சொல்லுங்கள் என்று புதிய அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்ததை தொடர்ந்தே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

