முடிவுகள் முடிவல்ல: உங்கள் பயணத்தின் புதிய தொடக்கம்

0

 



அபு அலா 


நீண்ட காலக் காத்திருப்புக்குப் பின், உங்கள் கடின உழைப்பிற்கான பெறுபேறுகள் இன்று உங்கள் கைகளில் இருக்கின்றன. இந்தப் புள்ளி விவரங்கள் உங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தைத் தீர்மானிக்கலாமே தவிர, உங்கள் முழுமையான ஆளுமையையோ அல்லது எதிர்காலத்தையோ, மனித நேயத்தையோ ஒருபோதும் தீர்மானிக்கப் போவதில்லை என்று இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தனது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


இப்பரீட்சையில் வெற்றி பெற்றவர்களினதும், வெற்றி பெறாதவர்களினதும் அர்ப்பணிப்புக்கும், உங்களின் உழைப்பு மற்றும் இரவு பகலாக நீங்கள் சிந்திய வியர்வைக்கு கிடைத்த பெறுபேறுகளாகும். இதில் சிலருக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளது. நல்ல பெறுபேற்றினைப் பெற்றவர்களுக்கு கிடைத்துள்ள பல்கலைக்கழக நுழைவு என்பது உங்கள் கனவுகளை நனவாக்கக் கிடைத்துள்ளதொரு நல்வாய்ப்பாகும். இந்த வெற்றியைத் தலைக்கனம் இன்றி ஏற்றுக்கொண்டு, சமூகத்திற்குப் பயனுள்ள ஒரு சிறந்த மனித நேயம் கொண்டவர்களாக தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


எதிர்பார்த்த முடிவைப் பெறாதவர்கள் நம்பிக்கையை மட்டும் எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடாதீர்கள். ஒரு பரீட்சைத்தாள் உங்கள் அறிவை அளவிடலாமே தவிர, உங்கள் திறமையையோ அல்லது விடாமுயற்சியையோ அளவிட முடியாது. தோல்வி என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல; அது ஒரு சிறிய இடைவேளை மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


உலகில் சாதித்த பல மேதைகள் வகுப்பறைக்குள் அங்கீகரிக்கப்படாதவர்களே என்பதை விளங்கிக் கொண்டு; உங்களுக்கென்று ஒரு தனித்துவமான பாதை எங்கோ காத்திருக்கிறது என்பதைத் தேடிப் பயணிக்கும் துணிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.


உயரப் பறக்கும் பறவைக்கு வானம் ஒருபோதும் எல்லையல்ல; அதேபோல் முயற்சி செய்யும் மனிதனுக்குத் தோல்வி ஒருபோதும் முடிவல்ல.

பெறுபேறுகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். உங்கள் பெற்றோருக்கும், இந்தச் சமூகத்திற்கும் உங்களின் மதிப்பெண்களைவிட உங்களின் இருப்பும், மனிதம் கொண்ட நற்பண்புகளுமே மிக முக்கியமாகும். எதிர்காலப் பயணங்கள் அனைத்திலும் நீங்கள் சிகரம் தொட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top