கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்ற சொகுசு பேருந்தில், சிசிடிவி (CCTV) பாதுகாப்பு கமெராவிற்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ ரக போதைப்பொருளைக் கடத்த முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த நபர் இன்று (26) கைது செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்தில் நபர் ஒருவர் பொதி ஒன்றை ஒப்படைத்துள்ளார். அக்கரைப்பற்றில் உள்ள ஒருவரிடம் இதனைச் சேர்க்குமாறு கூறிய அவர், அதைப் பெற்றுக்கொள்பவரின் தொலைபேசி இலக்கத்தையும் பேருந்து நடத்துனரிடம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, அக்கரைப்பற்று பகுதியில் வைத்து அந்தப் பொதியைப் பெற்றுக்கொள்ள வந்த இளைஞரை பொலிஸார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
குறித்த பொதியைச் சோதனையிட்ட போது, பாதுகாப்பு கமெராவிற்குள் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

