ஆதம் றியாஸ்
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம்: #நீண்டகால #எதிர்பார்ப்பு #நிறைவேறியது!
அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த கண் மருத்துவச் சேவைகள் மற்றும் கண் சத்திர சிகிச்சைகள், தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கண் நோய் சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் ஜிஹான் தெநுவர தலைமையிலான மருத்துவக் குழுவினர், நேற்று (04) ஐந்து நோயாளர்களுக்கு வெற்றிகரமாக முதற்கட்ட சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
தற்போது அவ்வைத்தியசாலையில் நிலவும் உட்கட்டமைப்பு மற்றும் வளப்பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு, நோயாளர்களின் நலன் கருதி அம்பாறை, மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூட வசதிகளைப் பயன்படுத்தி இந்த சத்திரசிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டன.
இனி முழுமையான கண் பரிசோதனைகள், கண்புரை (Cataract) அறுவை சிகிச்சைகள், பார்வை குறைபாடுகளுக்கான பரிசோதனைகள் என கண் நோய் தொடர்பான மேலும் பல சேவைகளை பொதுமக்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலயே பெற்றுக்கொள்ள முடியும்.
அந்த வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய கண் மருத்துவப் பிரிவை முழுமையாகச் செயற்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி. மசூத் அவர்களின் முயற்சியின் பலனாக இந்த சேவை நடைமுறைக்கு வந்துள்ளது. வைத்திய அத்தியட்சகரின் இந்த முயற்சியினால் பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மக்கள் இதன்மூலம் நன்மையடையவுள்ளனர்.
கடந்த காலங்களில் கண் நோய் தொடர்பான சிகிச்சைகளுக்காக கல்முனை மற்றும் மட்டக்களப்பு போன்ற தூர பிரதேசங்களுக்குச் சென்று வந்த நோயாளர்கள் உட்பட இப்பகுதி மக்கள், வைத்திய அத்தியட்சகர் ஏ.பி.மசூத் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

