நீண்ட கால திட்டங்கள் ஊடாக நிலை நிறுத்தப்பட்டு வரும் எமது பிரதேச அபிவிருத்தி, கல்வி பொருளாதார துறைகளிலான முன்னேற்றம் எமக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரத்தின் ஊடாக மேலும் வலுப்பெறும் - பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர்.
(எஸ்.அஷ்ரப்கான்)
நீண்ட கால திட்டங்கள் ஊடாக நிலை நிறுத்தப்பட்டு வரும் எமது பிரதேச அபிவிருத்தி, கல்வி பொருளாதார துறைகளிலான முன்னேற்றம் எமக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரத்தின் ஊடாக மேலும் வலுப்பெறும்.
இவ்வாறு நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான பொறியியலாளர் உதுமாகண்டு நாபீர் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையில் தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடும்போது,
அம்பாறை மாவட்டத்தில் கிடப்பில் இருக்கின்ற அபிவிருத்தி மற்றும் பொருளாதார நெருக்கடி இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு சுகாதாரத்துறை மேம்பாடுகள் என பல்வேறு வேலை திட்டங்களை நாம் அமுல்படுத்தி செயல்படுத்தி வருகிறோம். அந்த அடிப்படையில் தனியார் வைத்தியசாலை தனியார் தொழிற்கல்வி கூடம், இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையங்கள் என பல்வேறு சேவைகளை நாங்கள் செய்து வருகின்றோம். இதனூடாக மக்களுடைய தன்னிறைவு, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகள், சுகாதார மேம்பாடு என்பன காலடியில் மக்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் உள்ளது.
இதற்கு மேலாக கல்முனை மாநகர சபையையும் எமது புதிய அரசியல் கட்சியின் ஊடாக கைப்பற்றுவதற்கு நாங்கள் வியூகங்களை அமைத்து வருகிறோம். இதில் தமிழ் தரப்பு மற்றும் பலம் வாய்ந்த முஸ்லிம் தரப்புகள் எம்மோடு பேசி வருகின்றன. காலம் கனிந்து வரும்போது கல்முனை மாநகர சபை தேர்தலில் மிகவும் பலமான அரசியல் ஸ்திரமான நிலைமையை நாம் உருவாக்குவோம்.
மக்களுக்கான சேவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் அதனூடாக இருக்கின்றன. வெளிநாடுகள் மூலமாக நிதிகளை பெற்று எமது பிரதேசம் முன்னாள் தலைவர்கள் கனவு கண்ட கல்முனை பிரதேசமாக முஸ்லிம்களின் முகவற்றிலையாக மாற்றி அமைக்கப்படும். இதிலே ஏனைய சமூகத்தவர்களும் இணைக்கப்படுவார்கள். தூரநோக்கு சிந்தனை கொண்ட எமது பயணத்தில் மக்களை இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
வெறுமனே பொய் வாக்குறுதிகளால் நிரம்பி வழியும் எமது பிரதேசம் அபிவிருத்தி காண வேண்டுமா ? பொய் மூட்டைகளுடன் காலாகாலமாக வருகின்ற இத்துப்போன அரசியல்வாதிகளுக்கு எமது பிரதேச மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
இனியும் ஏமாறாமல், புதிய அரசியல் கலாச்சாரத்தை அம்பாறை மாவட்டத்தில் விதைப்பதற்கான முயற்சியில் நேர்மையானவர்களை மக்களுக்கு சேவை செய்கின்றவர்களை இனங்கண்டு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும். எமது கைகள் பலப்படுத்தப்படுகின்ற போது பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்களை இந்த பிரதேசங்களில் நாங்கள் செய்ய உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

