என்னுடைய அப்பா ஓர் அரச ஊழியர். அம்மாவால் இன்றும் எழுத முடியாது. தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த எங்களுக்கு உணவு கிடைக்காமல் தாய், தந்தை படுகின்ற துன்பத்தை எம்முடைய கண்களால் பார்த்தோம்.
எங்களுடைய கிராமப்புற பள்ளியில் பல ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லை. வந்த ஆசிரியர்கள் பலரும் விரைவாக இடமாற்றம் பெற்று வேறு மாகாணங்களுக்கு சென்றனர்.
குறிப்பிட்ட சில ஆசிரியர்களே எங்களைத் தங்கள் குழந்தைகளாகக் கருதி, எங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அவர்கள் இல்லாமல் நாம் இன்று இல்லை.
பெற்றோரின் சொற்ப வருமானம் கல்விச் செயற்பாடுகளுக்குப் போதாததால், பள்ளி விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் மாம்பழம், டொபி, சிகரெட் போன்றவற்றை நான் விற்றேன்.
மஹாவலி கிராமத்திற்கு வியாபார நிமித்தம் வந்த போது, மஹாவலிக்கு உட்பட்ட வீதிகளில் வடிகால் வெட்ட வேண்டி வந்தது. அப்போது ஒரு வடிகால் வெட்டுவதற்கு கூலி இருபது ரூபாய் ஆகும்.
நானும், ஊர் நண்பர்களும் இருபது ரூபாய்க்கு வீதியில் வடிகாண் வெட்டுவது வழக்கம். அந்த அளவுக்கு ஏழ்மை எங்கள் வாழ்வில் அழுத்தத்தை கொண்டு வந்தது.
எனது நண்பர்கள் பலர் தங்களுடைய கல்வியை தாமாகவே நாசப்படுத்தினர். கற்றுக் கொள்ள முடியாததால் அல்ல. குடும்பத்தில் படிப்பதற்கு போதிய பணம் இல்லாததால்.
வறுமையின் காரணமாக, சிலர் குடிபோதைக்குப் பழகி அகால மரணமடைந்தனர். வறுமை மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
வறுமையை ஃபெஷன் (Fashion) ஆக்கி, மாளிகைகளில் வாழ்ந்து கொண்டு, உலகம் பார்க்க ரப்பர் செருப்புகளை அணிந்து கொள்பவர்கள் அல்ல நாம்.
இப்போது நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். தூரத்திலுள்ள கிராமத்தில் பல ஏழைகள் உள்ளனர்.
தந்தை மற்றும் சகோதரர்கள் ஜனாதிபதியான, சிறந்த பள்ளிகளில் படித்த, கொழும்பை மையமாகக் கொண்ட, இச்சமூகத்தில் ஆடம்பரமான மாளிகைகளில் வளர்ந்த வேட்பாளர்களுக்கு மத்தியில், தூரத்துக் கிராமத்திலிருந்து வந்து இந்நாட்டின் ஜனாதிபதி பதவிக்காக போராட வந்த ஒரு சிறிய மனிதனான நான், அனைவருடனும் தோளோடு தோள் நிற்கிறேன்.
என்னுடன் எனது வகுப்பில் படித்த இந்நாட்டின் பல ஏழை மக்கள் எனக்கு பலம் தந்து உதவினர். வறுமையில் வாடும் என் வர்க்கத்திலுள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய, மீள முடியாத பொறுப்பு எனக்கு இருக்கின்றது. அதற்காக அரசியல் செய்கிறோம்.
ஒரு நாள் இறந்தாலும், நம் மக்களுக்காகப் போராடினோம் என்ற நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இறக்கலாம்.
-அனுரகுமார திஸாநாயக்க-
