முஸ்லிம்களுக்கு காணிகளை விற்ககூடாது என்று கூறுவது இனவாதத்தின் உச்சகட்டம்

0

- சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்.

உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளைப் போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகளை முஸ்லிம்களுக்கு விற்கப்படக்கூடாது என்பதாக விக்னேஸ்வரன் ஐயா தமிழ் சமூகத்துக்கு விடுத்துள்ள செய்தியை நான் அறிந்தேன். இது அப்பட்டமாக இனவாதத்தின் உச்சத்தை தொட்டுள்ள நிலைப்பாடாகும். ஏனென்றால் எவருக்கும் எங்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காணிகளை விற்று வாங்குவது சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையாக இருத்தல் வேண்டுமே ஒழிய இதில் இனவாதத்தை புகுத்துவது அழகோ, முறையோ அல்ல. அரசியலை, அழுத்தத்தை, வன்முறையை பிரயோகித்து காணிகள் எந்த தரப்பினராலும், எந்த வகையிலும் கைப்பற்றப்படவோ, கையகப்படுத்தப்படவோ கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்துக் கிடையாது என்பதையும் நான் கூறி வைக்கின்றேன்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் உடுத்த உடுப்போடு 24 மணி நேரத்துக்குள் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஒரேயடியாக வெளியேற்றப்பட்ட வரலாற்று துயரத்தில் இருந்து நாம் இன்னும் மீண்டு விடவில்லை. இந்நிலையில் விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களின் இவ்வாறான கருத்துக்கள் தமிழ் இளைஞர்களை மீண்டும் தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும் என்று அஞ்ச வேண்டி உள்ளது.

அத்துடன் இவ்வாறான கருத்துகள் தமிழ் பேசும் மக்களை நிரந்தரமாக பிரித்து வைப்பதாக உள்ளது. அரசியல் பிழைப்புகளுக்காக முன்வைக்கப்படுகின்ற பிழையான கருத்துகளால் மக்கள் தவறாக வழி நடத்தப்படுவதே காலம் காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் நீடித்த சக வாழ்வுக்கு சங்கடம் கொடுப்பதாகவும் உள்ளது. இந்நிலைமை முதலில் மாற்றப்படவேண்டும் என்றார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top