பாறுக் ஷிஹான் -
யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு இடம்பெற்ற நிலையில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த இராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் இராணுவ அணி ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த கல் ஒன்றை அகற்றுவதற்காக நான்கு இராணுவ வீரர்கள் இணைந்து அகற்ற முற்பட்டுள்ளனர்.
அவ்வேளை கல் அருகே புதைக்கப்பட்டிருந்த அமுக்க கண்ணிவெடி எதிர்பாராத நிலையில் வெடித்துள்ளது.
சம்பவ இடத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

