நியாயத்துக்கும் இனவாதத்திற்கும் இடையிலான போட்டி இது – பதவி என்பது ஒரு தூசு என்கிறார் ரிஷாத் !
என் மீது சுமத்தப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான அடிப்படைகளும் அற்றவை. இது நியாயத்திற்கும் இனவாதத்திற்கும் இடையிலான போட்டியே ஆகும்.
இதில் எது வெல்லப் போகின்றது என்று பார்ப்போம். இந்தப் அமைச்சுப் பதவி வெறும் பகட்டு இது எங்களுக்கு தூசு. ஆனால் யாரோ சொல்கிறார்கள் என்று நாங்கள் ஒருபோதும் ஓடத் தயாரில்லை.
இவ்வாறு சற்று முன்னர் “நியூஸ் டே” செய்திச் சேவைக்கு தனது கருத்தை தெரிவித்தார்.
"அமைச்சர் ரிஷாத் பதவி விலகப் போகிறார் அதற்கு அழுத்தங்கள் வந்துவிட்டன" என்ற செய்தி வெளியாகியுள்ளது அது உண்மைதானா? என்று கேட்ட கேள்விக்கு அவர் பதில் கூறுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் மேலும் தெரிவிக்கையில்,
என்னிடம் ஜனாதிபதியோ அல்லது வேறு யாருமோ பதவி விலகுமாறு அழுத்தங்கள் தரவில்லை. அவ்வாறு அழுத்தம் தருமளவுக்கு நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படித் தவறு செய்தால் அது என்ன தவறு என்று நான் கேட்கிறேன்.
என் மீது வைக்கப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுக்கள் எந்த அடிப்படையும் அற்றவை, நம்பிக்கையில்லா பிரேரணை நியாயத்திற்கும் இனவாதத்திற்கும் இடையிலான போட்டியே ஆகும். அதில் வேறு ஒன்றுமே இல்லை. அதில் எது வெல்லப் போகிறது என்று பார்ப்போம்.
இன்று எனது சமூகத்தின் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்படும்போது என் மீது வன்மங்கள் பிரயோகிக்கப்படும்போது இந்தப் பதவி பட்டங்கள் எங்களுக்கு பெரிதல்ல. அதை தூக்கி வீசிவிட்டு செல்வதும் எங்களுக்கு பெரிதல்ல. ஆனால் யாரோ சொல்கிறார்கள் என்று நான் ஏன் பதவி விலக வேண்டும்.
நான் ரணிலின் ஏஜெண்டும் அல்ல மைத்திரியின் ஏஜெண்டும் அல்ல. அவர்கள் வரச் சொல்லும்போது வரவும், போகச் சொல்லும்போது போகவும் நாங்கள் ஒன்றும் அவர்களின் அடியாட்கள் அல்ல.
இன்று அடிமைப்பட்ட நிலையில் உள்ள மக்களின் குரலான எம்மை எந்த ஒரு காரணமும் இல்லாமல் போகச் செல்வது தார்மீகமானதா என்று நான் கேட்க விரும்புகிறேன்.
எமது கட்சியின் உயர்பீடம் திங்கட்கிழமை கூடவுள்ளது. அதில் இப்போதைய நிலைமைகள் குறித்து கட்சி ஆராயவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

