முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் புதிதாக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவில் இயங்கும் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டதின்; அறிக்கையொன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் இலங்கையில் சித்திரவதைகளுக்கு ஆளானதாக தெரிவித்து இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில், மனுதாரர்கள் தங்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு தம்மை அடையாளங்காட்டவில்லை.
காவல் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் தாங்கள், அனுபவித்த உரிமை மீறல்களை அவர்கள் விபரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 10 புதிய வழக்குத் தொடுநர்களில் 8 தமிழர்களும் இரண்டு சிங்களவர்களும் அடங்குவதுடன் அவர்களில் மூன்று பேர் பெண்களாவர்.
நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச சட்ட நிறுவனமான கோஸ்பீல்ட் உடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆறு வருட கால விசாரணைகளின் விளைவாகவே இந்த வழக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே ஏப்ரல் 5ஆம் திகதி கனடா பிரஜையான றோய் சமதானம் என்பவரின் சார்பாக முதலில் தாக்கல் செய்யப்பட்ட முன்னைய வழக்கில் இந்த வழக்கு தொடுநர்களும் இணைந்து கொள்கின்றனர்.
இந்த வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம் வழங்கும், சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேவேளை சிங்களே விடுதலை முன்னணியால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தினார்.

