குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்புத்தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட, 10 ஊழியர்களில் 9 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களில் 9 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், 10ஆவது சந்தேகநபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா என்பவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான மொஹமட் லாபீர், ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்துள்ளமை தொலைபேசி அழைப்புக்களூடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த 10 சந்தேகநபர்களும் இரண்டு தொடக்கம் 8 சிம் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என பொலிஸார் மன்றில் கோரியுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் எந்த சட்டத்திற்கமைய விசாரணை நடத்தப்படுகின்றது என நீதவான் பிரியந்த லியனகே பொலிஸாரிடம் வினவியுள்ளார்.
இது தொடர்பில் உரிய பதிலளிப்பதற்கு பொலிஸார் தவறியமையால், 9 சந்தேகநபர்களையும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

