பசியோடு வந்த மூதாட்டி.. கஞ்சா போதை ஆசாமி செய்த கொடூரம்.. உயிர் பிரிந்தது கூட தெரியாமல் கொடுமை..
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் கிராமத்தில் 55 வயதான சகுந்தலா என்ற மூதாட்டி கஞ்சா போதையில் இருந்த இளைஞரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகுந்தலாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். சகுந்தலாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவர் கூலி வேலை செய்து தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான ரஞ்சித் என்ற இளைஞர், கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, அக்கம்பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தனியாக வசித்து வந்த சகுந்தலாவிடமும் ரஞ்சித் பிரச்சனை செய்ததாகவும், இதற்கு ஊர் மக்கள் அவரைக் கண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 21-ம் தேதி, கூலி வேலைக்குச் சென்றிருந்த சகுந்தலா மதிய உணவு சாப்பிடுவதற்காக வீடு திரும்பியபோது, கஞ்சா போதையில் இருந்த ரஞ்சித் அவருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரஞ்சித், கீழே கிடந்த கல்லை எடுத்து சகுந்தலாவைத் தாக்கியுள்ளார். ரத்தத்தைக் கண்டதும் கொலை வெறிக்கு ஆளான ரஞ்சித், மூதாட்டி என்றும் பாராமல் பெரிய கல்லை எடுத்து சகுந்தலா மீது போட்டு கொடூரமாகத் தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கஞ்சா போதையில் சகுந்தலாவின் உயிர் பிரிந்தது கூட தெரியாமல் மீண்டும் கல்லை தூக்கி போட்டு தாக்கி கொடுமை செய்துள்ளான்.
இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், ரஞ்சித்தைப் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அன்னூர் காவல்துறையினர், சகுந்தலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், ரஞ்சித்தை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்கள் அப்பகுதியில் அடிக்கடி நடைபெறுவதாகவும், காவல்துறை இதில் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.