பைஷல் இஸ்மாயில்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தில் மாற்றமொன்றை கொண்டுவராத வரை அத்திட்டம் ஒருபோதும் வெற்றியைத்தராது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கிடமில்லை.
"கிளீன் ஸ்ரீலங்கா" என்பது இலங்கையில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் ஒரு வேலைத்திட்டமாகும். இதன் மூலம், நாட்டின் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும், கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும், பொது இடங்களில் தூய்மையை பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடன், பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தின் முக்கிய பங்காக இருப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பாகும். குறிப்பாக, நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சுற்றுசூழல் மாசுபாட்டை தடுக்கவும், திண்மக்கழிவுகளை முறையாக அகற்றி அதனை மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் சுகாதாரமான சூழல் போன்றவற்றை உருவாக்கி பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம், இலங்கை ஒரு தூய்மையான மற்றும் சுகாதாரமான நாடாக உருவெடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அரசும், அரசாங்கமும், இத்திட்டத்தை நாடு முழுவதிலும் மிகச்சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, நாட்டிலுள்ள மக்கள் அதே தவறினை மீண்டும் மீண்டும் தொடராகச் செய்து வருகின்றனர். முதலில் மக்கள் மனதில் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டம் தொடர்பான மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடத்தில் மாற்றம் வராத வரை இத்திட்டம் ஒருபோதும் வெற்றியைத்தராது.
அதற்காக, "கிளீன் ஸ்ரீலங்கா" தொடர்பான விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு வழங்குவதுடன், அதை மீறி செயற்படுபவர்களுக்கெதிராக ஒரு இறுக்கமான சட்டத்தையும் அமுல்படுத்த வேண்டும். அப்போதுதான் இத்திட்டத்தை ஓரளவு வெற்றிகரமாக கொண்டு செல்லமுடியும். இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் "கிளீன் ஸ்ரீலங்காவைத் தவிர வேறு எந்த விடயங்களையும் எமது நாட்டில் முன்னெடுத்துச் செல்லமுடியாது.
எனவே, அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி செயற்படுமாக இருந்தால் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டம் 50 சதவீதம் வெற்றிபெற வாய்ப்புள்ளது. இல்லையென்றால் முழுமையான தோல்வியை மாத்திரமே தழுவும்.

