வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் டிஃபெண்டர் வாகனத்தின் சாரதியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (09) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மழையின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பயணித்த டிஃபெண்டர் வாகனம் வீதியில் சென்ற கறவை மாடு ஒன்றின் மீது மோதியதாகவும், பின்னர் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, மடுகந்தையில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் குருநாகல் மற்றும் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.