ஸெய்ன்ஸித்தீக்
ஆயகலைகள் 64 என்பார்கள் அதில் தற்காப்புக்கலையும் ஒரு முக்கியமான அம்சமாகும். மருவிப் போய்க் கொண்டிருக்கும் இக்கலைகளை பயின்றவர்களை விரல் விட்டு எண்ணக்கூடியதாகவே உள்ளது. இப் பாரம்பரிய கலைகள் கிழக்கு மாகாணத்தின் இறக்காமம் பிரதேசத்திலே பயின்றவர்களில் கலாபூசனம்.ஆதம் லெவ்வை சுலைமான் லெவ்வை (றாஸிக்) அவர்களும் முக்கியமான ஒருவர் ஆவார்.
நேற்று (2023.10.15) ஆம் திகதி தனது 78 வது வயதில் காலமானார்கள். இது இறக்காமம் பிரதேசத்திற்கு ஒரு பாரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இவர் தான் மரணிப்பதற்கு ஆறு வருடங்களுக்கு முற்பட்ட காலங்களில் விசேட நிகழ்வுகளில் தன்னிடம் காணப்படும் சீனடி, சிலம்படி, வாழ்வீச்சு போன்ற வீரக்கலைகளை ஆடிக் காண்பித்து பார்வையாளர்களை சந்தோஷப்படுத்தக் கூடியவராக இருந்தார். இத்தகைய மூத்த கலைஞரை இழந்தமை ஏனைய கலைஞர்கள் மத்தியிலே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொது வாழ்க்கையில் பொறுமையும், அமைதியுமிக்க குணம்கொண்ட கலாபூசனம் சுலைமான் லெவ்வை மார்க்கப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்து நற்பண்புகளுடன் வாழ்ந்துவந்தார். தனது ஐந்து பிள்ளைகளில் ஒரு மௌலவியா உட்பட நான்குபேரை ஆசான்களாக எம் சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ள இவருக்கு இறைவனின் நற்பேறுகள் கிடைக்குமென இறக்காமம் ஊரே உரைப்பது இவரின் சாதுவான குணத்திற்கு நற் சான்றாக அமைந்துள்ளது.