இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில், மூன்று மற்றும் நான்காவது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்குப் பாரிய நிதி உதவி வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தால் 30,000 ரூபாயும், நான்காவது குழந்தை பிறந்தால் 40,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக (Incentive) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் பிறப்பு விகிதம் (Birth Rate) கணிசமாகக் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இளைஞர்களின் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில், மக்கள் தொகையைச் சீராக வைத்திருக்கவும், தம்பதிகளை அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்க ஊக்குவிக்கவும் ஆந்திர அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

