மலையக சமூகம் பெற்றிருந்த அரசியல் மற்றும் கல்வி உரிமைகளை படிப்படியாக இழந்து வருகிறது. இந்த இழப்பு மத்திய மாகாண சபைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நாம் மிகவும் விழிப்புடன் ஒற்றுமையாக இருந்து கொள்ள வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், மத்திய மாகாண முன்னாள் கல்வியமைச்சரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ். சதாசிவம் தெரிவித்தார்.
“மலையக அரசியல், சமூக நிலைமை” தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நேற்று (9) ஹட்டன் தொழிலாளர் பொழில் நிலையத்தில் இடம்பெற்றபோது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொழிலாளர் பொழில் நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் எம். நேசமணி, ஹட்டன் நகர சபை முன்னாள் உறுப்பினர் எம். பிர்ஷ்ணவ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் கல்வித்துறை, தொழிற்சங்கம், வர்த்தகம், சுயதொழில், சமூக செயற்பாடு போன்ற பல துறைகளைச் சார்ந்த சுமார் 30 பேர் கலந்து கொண்டார்கள்.
அதேபோல், மலையகத்தில் கல்வி வளர்ச்சிக்கும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களுக்கு மேலதிக கல்விப் பணிப்பாளர்கள் உட்பட இந்திய வம்சாவளி தமிழர்களில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனத்தையும் பெற்றுக் கொடுத்திருந்தார். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி வருவதோடு, எதிர்கால அரசியல், கல்வி உரிமைகள் கேள்விக்குறியாகும் அச்சமும் உருவாகியுள்ளது.
எமக்கிருந்த மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்கள் நியமனம் பறிபோயுள்ளது. வலயக் கல்வி அலுவலகங்களில் மலையக இந்திய வம்சாவளி தமிழ்க் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் பெறப்பட்ட ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் இந்திய வம்சாவளி பணிப்பாளர் இல்லை. காரணம், தகுதியானவர்கள் எம் மத்தியில் இல்லை என்று கூறப்படுகின்றது.
அதேபோல், அரசியல் ரீதியில் எமக்குக் கிடைத்த பிரதிநிதித்துவமும் குறைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய, ஊவா, சப்பிரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் ஒரு நேரத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களில் 10 பேர் உறுப்பினர்களாக இருந்த நிலையில் இன்று 4 பேர் மட்டுமே இருக்கின்றார்கள்.
உள்ளூராட்சி மன்றங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 7 பேர் கடந்த காலங்களில் தலைவர்களாக இருந்தார்கள். ஆனால், இன்று ஹட்டன் – டிக்கோயா, தலவாக்கலை – லிந்துல நகர சபைகள் இழக்கப்பட்டுள்ளன. ஹட்டன் நகர சபையில் 10 உறுப்பினர்கள் இருந்த இடத்தில் இன்று ஆறு உறுப்பினர்களே இருப்பதாகக் கூறப்படுகின்றது. இது எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நாம் விழிப்புடனும் ஒற்றுமையுடனும் இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார்.

.jpeg)