இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வை கருத்தில் கொள்ளும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என IMF இன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்துள்ளார்.
IMF தலைமையகத்தில் நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டம், கடன் திட்டத்தின் அளவுருக்களுடன் ஒத்துப்போகிறதா என்பதை IMF பணியாளர்கள் தற்போது ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.
"சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி, இலங்கைக்கான IMF நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு தொடர்பில் IMF பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் பணியாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இந்த இணக்கப்பாடு IMF இன் நிறைவேற்று சபை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், இலங்கைக்கு சுமார் 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவிக்கான அணுகல் கிடைக்கும்.
இதற்காக நிறைவேற்று சபை அடுத்த சில வாரங்களில் கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
"2026 வரவுசெலவுத் திட்டம் IMF திட்டத்தின் அளவுருக்களுடன் (parameters) இணங்குகிறதா என்பதைத் தீர்மானிக்க, எமது பணியாளர்கள், வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட ஆவணங்களை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த மதிப்பீடு நிறைவேற்று சபையின் ஆய்வுக்காக மிகவும் முக்கியமானது. இதுவும் அடுத்த சில வாரங்களுக்குள் நடக்கும்."
"மறுசீரமைப்பை பொறுத்த வரையில், அவை இலங்கையின் திறனை மேலும் அதிகரிப்பதற்கு மிகவும் முக்கியமானது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

.jpeg)