திரைப்படம் பார்க்கும் பழக்கம், ரீல் ஸ்க்ரோல் செய்வது போன்றவை தூக்கத்தை குறைத்து, ஹார்மோன் சமநிலை, மனநிலை, குடல் ஆரோக்கியம், ஞாபக சக்தி ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்களை பார்த்துக்கொண்டோ அல்லது மொபைலில் ரீல்களை ஸ்க்ரோல் செய்து கொண்டோ நேரம் போவதே தெரியாமல், தினமும் தாமதமாக தூங்கும் ஒருவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பழக்கமானது சத்தம் இல்லாமல் உங்களுடைய ஆரோக்கியத்தை பாதித்து வருகிறது. இரவு தாமதமாக தூங்குவதால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைத்து விடாதீர்கள். இதனால் உங்களுடைய உடலில் பல்வேறு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். போதுமான அளவு தூக்கம் இல்லாததால் உங்களுடைய உடலின் இயற்கை ரிதம் பாதிக்கப்பட்டு, அதனால் மோசமான உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். ஆகையால் இரவு நீண்ட நேரம் விழித்திருந்து தாமதமாக தூங்குவதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
advertisement
உடல் எடை அதிகரிப்பு:
தாமதமாக படுக்கைக்கு செல்வதால் உங்களுக்கு தூங்குவதற்கு குறைவான நேரமே கிடைக்கும். இதனால் பசியை சீராக்கும் லெப்டின் மற்றும் கிரெலின் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் சமநிலை பாதிக்கப்படுவதால் பசி அதிகரித்து, நள்ளிரவில் தின்பண்டங்கள் சாப்பிடுவது அல்லது அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுவது போன்ற பழக்கங்களுக்கு ஆளாவீர்கள். உடலுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காத போது உடலானது அதிக கலோரி நிறைந்த உணவுகளுக்காக ஏங்கும். நாளடைவில் இதன் விளைவாக உடற்பருமன் மற்றும் அதனால் டயாபடீஸ் போன்ற நிலைகள் கூட ஏற்படலாம்.
advertisement
மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்:
இரவு தாமதமாக தூங்கச் செல்வது உங்களுடைய மன நலனிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தூக்கம் என்பது உங்களுடைய மனநிலையை சீரமைப்பதில் முக்கியமான ஒன்று. ஆனால் உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காத போது வீண் எரிச்சல் மற்றும் குறைவான ஆற்றல் போன்ற விளைவுகள் உண்டாகும். மனநிலையில் ஏற்படும் தொடர்ச்சியான இந்த சிக்கல்கள் நாளடைவில் மனசோர்வுக்கு வழிவகுக்கிறது. போதுமான அளவுக்கு தூக்கம் இல்லாத காரணத்தால் உணர்வுகளை செயலாக்கம் செய்யும் மூளையின் திறன் குறைவதால் இது ஏற்படுகிறது.
advertisement
கார்டிசால் அளவுகள் அதிகரிப்பு:
தொடர்ச்சியாக இரவுகளில் நீங்கள் தாமதமாக தூங்க செல்லும் போது உங்களுடைய மன அழுத்தமானது அதிகரிக்கிறது. போதுமான அளவு தூக்கம் கிடைக்காததால் கார்டிசால் என்ற முதன்மை ஸ்ட்ரெஸ் ஹார்மோன் உற்பத்தி அதிகமாகிறது. மேலும் மன அழுத்தத்தை கையாளும் உங்களுடைய உடலின் திறன் பாதிக்கப்பட்டு அதனால் பதட்டம் ஏற்படும். தொடர்ச்சியாக கார்டிசால் அளவுகள் அதிகமாக இருப்பது உங்களுடைய மூளையின் பருமனை குறைத்து, அதனால் உங்களுடைய ஞாபக சக்தி மற்றும் அறிவுத்திறன் செயல்பாட்டில் கூட பாதிப்புகள் ஏற்படலாம்.
advertisement
கவனிப்புத்திறன் மற்றும் முடிவு எடுக்கும் திறனில் பாதிப்பு:
இரவு தாமதமாக தூங்குவதால் மூளையில் ஒரு மந்த நிலை ஏற்பட்டு, நாள் முழுவதும் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஞாபக சக்தி மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அறிவு திறன் செயல்பாடுகளில் குறைபாடுகள் உண்டாகும். 7 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் பெறுவதால் கவனிப்பு மற்றும் முடிவு எடுக்கும் திறனுக்கு காரணமாக இருக்கும் மூளையின் பகுதியில் செயல்பாடு குறைகிறது.
advertisement
குடல் ஆரோக்கியத்தில் சிக்கல்:
போதுமான அளவு தூக்கம் இல்லாதது உங்களுடைய குடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் ஹார்மோன்கள் சமநிலையில் பிரச்சனை உண்டாகி, அது செரிமானம் மற்றும் மெட்டபாலிசத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சீரற்ற தூக்க வழக்கமானது குடல் நுண்ணுயிரிகள் சமநிலையை பாதித்து, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
advertisement
எனவே என்ன செய்ய வேண்டும்?
தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது உங்களுடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கான ஒரு முக்கியமான விஷயம். இரவு தாமதமாக தூங்குவதால் உங்களுடைய ஹார்மோன் சமநிலை, குடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலை கூட பாதிக்கப்படலாம். எனவே ஒவ்வொரு நாள் இரவும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள். தூங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு முன்பு ஸ்கிரீன்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தூங்குவதற்கான அமைதி நிறைந்த சூழலை அமைப்பதன் மூலமாக நல்ல தரமான உறக்கத்தை பெறலாம்.








