GCE (O/L) பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால் முஸ்லிம் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் முகம்மத் இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (07) இடம் பெற்ற வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளையின் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: "உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது தொடர்பில் நாம் அரசாங்கத்துக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், மார்ச் மாத காலப் பகுதியிலேயே தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இக்காலத்திலேயே GCE (O/L) பரீட்சையை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டிள்ளது. அதே வேளையில், புனித ரமழான் நோன்பும் இக்காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்படும்.
அதனால், நோன்பு காலத்தில் பரீட்சை இடம் பெறும் சமயத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கு அது பாதிப்பாக அமையும். இதனால், இவ்விடயத்தை கருத்திற் கொண்டு அரசாங்கம் பரீட்சை நேர அட்டவணையை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் யுத்தம் மற்றும் இடம் பெயர்வு காரணமாக பாதிக்கப்பட்டவர்களாகும். இந்த மாவட்டங்களில் மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து இடம் பெயர்ந்ததன் காரணமாக வன வள திணைக்களம் இந்த மக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டு, இந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்திருக்கின்றது.
இதனால், அங்கு விவசாயம் செய்து வந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். அதேபோன்று வுவுனியா மாவட்டத்தில் பம்பமடு பிரதேசம் குப்பை கூளங்களை சேகரிக்கும் பிரதேசமாக மாறியிருக்கிறது.
அதன் மேற்குப் பக்கம் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கிறார்கள். அதே போன்று வீதிக்கு மறுபக்கத்தில் வவுனியா பல்கலைக்கழகம் அமையப் பெற்றுடுள்ளது. இந்த குப்பை மேட்டினால் ஏற்படுகின்ற துர்வாடை காரணமாக இந்த மக்களும் மாணவர்களும் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
அதே போன்று இப்பிரதேசத்தில் இருக்கும் நீர் நிலைகளிம் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளின் கழிவுகளும் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.
எவ்வித பாதுகாப்பு வேலியும் இல்லாத காரணத்தினால் இங்கு கொட்டப்படும் எச்சங்களை கால்நடைகள் எடுத்துச் சென்று கிராமங்களுக்குள்ளும் பல்வேறு இடங்களிலும் போடுகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
