ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டார்வின் துறைமுகத்தில் ஒரு விடியற்காலையில் இருள் சூழ்ந்திருந்தது. முதலைகளைப் பிடிக்க அரசாங்க ரேஞ்சரான கெல்லி எவின் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
அதுவே அவரது அன்றாடப் பணி. இதற்காக அவர் ஒரு மிதக்கும் பொறியில் ஆபத்தான சூழலில் சமநிலையைத் தக்க வைத்துக்கொண்டு பணியை மேற்கொள்கிறார்.
சமீபத்தில் அங்கு கரையைக் கடந்த புயலின் விளைவாக தீவிர மழை மேகங்கள் காணப்பட்டன. நாங்கள் சென்ற படகு, எஞ்சின் நிறுத்தப்பட்டு அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. இடையிடையே முதலைகளைப் பிடிக்க வைத்துள்ள பொறியில் இருந்து நீர் தெறிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
"முதலைகள் பொறியில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு" என்று கூறும் எவின் சீற்றம் கொண்டிருக்கும் முதலைகளின் தாடையைச் சுற்றி ஒரு சுருக்குக் கயிற்றை வீசி, சுற்றி வளைக்க முயல்கிறார்.

