தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை!

Dsa
0

 



நூருல் ஹுதா உமர் 


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல் இன்று 2024.04.29 ஆம் திகதி பேராசிரியர் கொலின் என் பீரிஸ் அவர்களது தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கோரப்பட்டுள்ளத்தான் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்தனர்.


இதன் அடிப்படையில் முதலாவதாக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களும் இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மி அவர்களும் மூன்றாவதாக பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோர் அதிக புள்ளிகள் அடிப்படையில் பேரவையால் பரிந்துரை செய்யப்பட்டனர்.


தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது முதலாவது பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.09 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின் சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் அவர்கள் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த 2024.02.08 ஆம் திகதி விடுத்திருந்தார்.


அதன் அடிப்படையில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்திருந்தனர்.


தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு இம்முறை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்திருந்தனர்.


 பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை.

கடந்த 2021.08. 09 ஆம் திகதியன்று பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் 5 ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். இன்று தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி ஆறாவது உபவேந்தராக நியமிப்பார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top