ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன்

Dsa
0

 




இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்த, ஜனாதிபதியின் அழைப்பில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழிவுகள் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கை தனக்கு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


“எதிர்க்கட்சித் தரப்பில் நான் மட்டும்தான் பிரசன்னமாகியிருந்தேன். சரியான தரவுகள் எங்களுக்கு இல்லாத சூழ்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்க முடியுமா என எங்களால் சொல்ல முடியாது என குறிப்பிட்ட பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவு அறிக்கையை எங்களுக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். முதலில் எனக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள்.”



சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தனிப்பட்ட அழைப்பு

இந்தக் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


எனினும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் மாத்திரமே எதிர்க்கட்சிகள் சார்பில் பங்கேற்றிருந்ததோடு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.


இந்த விடயம் தொடர்பில் வினவியபோதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எவ்வாறெனினும் இந்த கூட்டத்தில் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனக்கு கிடைத்த தனிப்பட்ட அழைப்பிற்கு அமைய பங்கேற்றதாக குறிப்பிட்டார்.


ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதேநேரத்தில், வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பில், யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top