நூல் அறிமுகம்
பக்கங்கள் 80.
விலை 400/-
முறைசார் கல்வியின் அடித்தளம் பாடசாலைகளே. அதுவே மூன்றாம் நிலைக்கல்வியின் நுழைவாயில். பல்கலைக்கழக் கல்வியின் முன் நிபந்தனை. இலங்கையில் அமுலில் உள்ள இலவசக் கல்வி தொடர்பாக குறிப்பாகவும் பாடசாலைக் கல்வி தொடர்பாக பொதுவாகவும் கடுமையான விமர்சனங்கள் கல்வியியலாளர்களிடையே நிலவுகின்றது. பாடசாலை நீக்கம் (Deschooling thought) குறித்து 1960 களிலேயே புரட்சிகரமான சிந்தனைகள் மேலைய உலகில் முன்வைக்கப்பட்டன. ஐவன் இல்லிச் போன்றோர் அதன் முன்னோடிச்சிந்தனையாளர்களாக் கருதப்படுகின்றனர்.
இலங்கையில் இலவசக்கல்வி அமுலில் உள்ளது. அதற்கென பல கோடிகள் செலவாகின்றன என அரசாங்கம் சாதிக்கின்றபோதும் டியுசனும் தனியார் மயமும் கல்வித்துறையை வெகுவாக பாதித்துவருவது பற்றியும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.
இத்தகைய கொள்கைசார்ந்த நெருக்கடிகள் ஒருபுறம் நிலவுகின்றபோதும் மறுபுறம் இருக்கின்ற பாடசாலைகளின் கல்வி அடைவு மட்டம், அறம்சார் முன்னேற்றம்.ஒழுங்குக்கட்டுப்பாடு (Discipline) என்பனவும் வேகமாக வீழ்ந்து வருவது கண்கூடு. சமீபத்திய ஆண்டுகளில் இலங்கையின் பல பாகங்களிலும் நடந்த சம்பவங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன. உண்மையில் பாடசாலைக் கல்வி மூலம் நாம் அடைய விரும்பும் இந்த மூன்று அடிப்படை இலக்குகளையும் எட்டவதிலுள்ள சவால்கள் பற்றிய விழிப்பு காலத்தின் கட்டாயமாகும்.
பாடசாலைக் கல்வி வீழ்ச்சியடைகிறது அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்ற விவாதம் தொடர்ச்சியாக நடந்துவரும் சூழலில் பரஸ்பரம் ஒவ்வொரு தரப்பும் அடுத்தவர்களைக்குற்றம் சாட்டும் ஒரு மரபு இங்கே வளர்ந்துள்ளதைக்காணலாம். ஆசிரியர்கள் பெற்றோர்களையும் பெற்றோர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் குறை கூறித் திரிகின்றனர். பழைய மாணவர் அமைப்பும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ஒரு பாடசாலைகல்வி மேம்பாட்டில் நாம் எங்கே சறுக்குகின்றோம். எந்தத்தரப்பு எந்த இடத்தில் தவறிழைக்கின்றது என்பது பற்றிய சுய பரிசீலனை இல்லாமல் பந்தை மாற்றிக்கொண்டு காலம் கடத்துவதால் ஆன பயன் எதுவுமில்லை. பாடசாலைக் கல்வி முன்னேற்றத்தில் பல்வேறு தரப்பும் தத்தமது வகிபாகங்களை முறையாகவும் முழுமையாகவும் ஆற்றவேண்டியுள்ளது. பாடசாலைகளுக்கு வளங்களை வழங்கும் அரசாங்கத்தின் நியாயத்தன்மை. வினைத்திறன் மிக்க அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள். மாணவர்கள்,பழைய மாணவர் அமைப்பு,பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அல்லது குழு என மேம்பாட்டின் பங்காளர்கள் பல்வகைப்பட்ட வர்கள்.
இந்த ஒவ்வொரு திறத்தவரும் தமது வகிபாகத்தை முறையாக ஆற்றத்தவறும் பட்சத்தில் மாணவர்கள் இடைவிலகல் வரை வந்து சேரும் பேராபத்து உள்ளதென்று இந்நூல் வாதிக்கின்றது. ஆபிரிக்காவில் கென்யாவின் மகர்வாத் மாவட்டத்தில் யுனிசெப் வழங்கிய உதவியுடன் நடந்த ஆய்வு இங்கே மேற்கோள்காட்டப்படுகின்றது. தவிரவும் இலங்கையின் முன்னணி கல்வியியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளும் கலந்துரையாடப்படுகின்றன. எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறிய நூல்.
வங்கிக்கணக்கில் பெறுமதியை வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை வாட்ஸ்அப் பண்ணுவதன் மூலம் நூலைத் தபாலில் பெறலாம் . குறைந்த பிரதிகளே அச்சிடப்பட்டதால் விலை சற்று அதிகரித்துவிட்டது. 50/- தபால் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.தொடர்புகளுக்கு 0772319107
