பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் வெற்றிபெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஆர்சிபி மற்றும் மும்பை அணிகளின் கைகளில் ஊசலாடி கொண்டிருக்கிறது.
பஞ்சாப் அணியின் தோல்விக்கு கேப்டன் ஷிகர் தவானின் மோசமான கேப்டன்சியே காரணம் என்று அதிகளவில் விமர்சனங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் தோல்வி குறித்து ஷிகர் தவான் பேசுகையில், பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழந்ததால், நாங்கள் அதிரடியாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் ஜித்தேஷ் சர்மா, ஷாரூக் கான் மற்றும் சாம் கரணின் அதிரடியால் சிறந்த இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில் பவுலிங் சிறப்பாக அமைந்தது.
ஆனால் ஃபீல்டிங் கோட்டைவிட்ட சில கேட்ச்கள் எங்களின் வெற்றியை தடுத்தது என்று சொல்லலாம். இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் அடித்திருந்தால் நல்ல இலக்காக அமைந்திருக்கும். அதே மூன்று துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். சில நேரங்களில் பேட்டிங், சில நேரங்களில் பவுலிங் என்று சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் இரண்டிலும் ஒரே நேரத்தில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனால் ஒரு இளம் அணியாக நாங்கள் ஏராளமானவற்றை கற்றுக் கொண்டுள்ளோம்.
நான் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல விரும்பியதால், முக்கிய பந்துவீச்சாளர்களின் ஓவரை வேகமாக வீச வைத்தேன். அதனால் தான் கடைசி ஓவர் ராகுல் சஹர் கைகளில் கொடுக்கப்பட்டது. கடந்த போட்டியில் ஹர்ப்ரீத் ப்ராரிடம் கொடுத்திருந்தேன். இந்த முடிவுகள் ஆட்டத்தின் சூழலையும், பிட்சையும் பொறுத்து எடுப்பதுதான் என்று தெரிவித்தார். மேலும், 2014ஆம் ஆண்டுக்கு பின் பஞ்சாப் அணி மீண்டும் 9வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
