- பிரமிளா கிருஷ்ணன்
சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளி மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நாட்டியம் கற்றுக்கொள்வதை தனது கனவாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களில் நாட்டியப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மூலம் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக தனக்கு விருப்பமான நாட்டியப்படிப்பில் ஆர்வம் மிகவும் குன்றிப்போனதாகச் சொல்கிறார்.
ஒரு கட்டத்தில் நாட்டியப்பள்ளியின் உள் புகார்கள் விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தபோது, அவரது புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், விசாரிக்க முடியாது என்றும் பதில் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
''பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்கும் உள் புகார்கள் விசாரணைக் குழுவில்(Internal complaints committee) பெண்களின் புகார்தான் ஏற்றுக்கொள்ளப்படும், ஆண் மாணவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்கு யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லை,''என்று வருத்தத்துடன் பேசுகிறார் சந்துரு.
தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் எந்த வகையில் அமைந்தது என்றும் புகார் கொடுத்தபோது எப்படி மேலும் குழப்பம் அதிகரித்தது என்றும் கூறுகிறார் அவர்.

