S.M.Z.சித்தீக்
இன்று (2023.04.20)அதிகாலை 3:30 மணி அளவில் இறக்காமம் பிரதேசத்துக்குள் மூன்று காட்டு யானைகள் ஊடுருவியுள்ளன.
இறக்காமம் குளத்தினை ஊடறுத்து குளக்கரை ஓரமாக ஊருக்குள் வந்த யானை பாடசாலை வீதி ஊடாக அஷ்ரப் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் வீதியூடாகப் பயணித்த இம்மூன்று யானைகளையும் சில இளைஞர்களால் அவதானிக்க முடிந்தது. உடனடியாக அந்த இளைஞர்களில் ஒருவர் ஊருக்குள் வரும் காட்டு யானைகள் அசம்பாவிதங்களை ஏற்படுத்தி விடும் என்பதற்காக 119 பொலீஸ் பிரிவினருக்கு அழைப்பு விடுத்த பொழுதிலும் அவர்களோடு தொடர்பினை ஏற்படுத்த முடியாததின் விளைவாக இளைஞர்களாக ஒன்று சேர்ந்து யானையினை விரட்டும் பணியில் ஈடுபட்டார்கள்.
மைதானத்தின் பிரதான விளையாட்டு அரங்கினை அண்மித்த இந்த மூன்று யானைகளும் குளக்கரை ஓரமாக இருந்த தென்னந்தோப்பிற்குள் சென்றது. குறித்த இளைஞர்கள் தென்னந்தோப்பின் உரிமையாளர் ஓய்வு பெற்று கிராம சேவை உத்தியோகத்தர் அஹமட் லெப்பை அவர்களோடு அவசரமாக தொடர்பு கொண்டு யானை விரட்டும் பணியில் ஈடுபட்டார்கள். தென்னந்தோப்பிற்குள் காணப்பட்ட சில வாழை மரங்களை சேதப்படுத்திய நிலையில் யானை இளைஞர்களால் விரட்டப்பட்டது.
மேலும் குறித்த விளையாட்டு மைதானத்தின் பிரதான அரங்கில் தூங்கிக் கொண்டிருந்த நபருக்கு அருகாமையிலேயே இவ்வானைகள் பயணித்த பொழுதிலும் குறித்த நபரின் உயிர் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டமை இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
