இலங்கையைச் சேர்ந்த வாத்தியார் கண்ணீரால் எழுதும் மடல்

Dsa
0

 



ஆசிரியம் என்ன அர்ப்பணிப்புத் தொழிலா?அடிமைத் தொழிலா?அன்றொரு நாள் அர்ப்பணிப்புத் தொழிலாய் தான் இருந்தது.இன்றோ அடிமைத் தொழிலாய் மாறிவிட்டது.பல நூறு பயங்கள் மத்தியில் இன்றைய ஆசிரிய வாழ்கை.! எடுப்பதோ ஒரு துளி சம்பளம் ஆனால் ஓராயிரம் வேலைப் பழுக்கள் இருநூரு நாளைக்குள் இரண்டாயிரம் திட்டங்கள் கணிப்பீடு, மதிப்பீடு,பகுப்பாய்வு, தொகுப்பாய்வு, முன்னூட்டல், பின்னூட்டல் என முந்நூறு திட்டங்கள் "சுண்டைக்காய் காற்பணம் சுமைக்கூலி முக்கால் பணம்"  என்பது போலத்தான் இன்றைய ஆசிரிய வாழ்க்கை!


ஊதாரி மாணவர்களின் உபத்திரவம் ஒரு பக்கம் ஊர்மக்களின் விமர்சனம் மறுபக்கம் காகத்துக்குக் கனவிலும் பனங்காய் சூப்பும் எண்ணம் போலஎங்களுக்குக் கனவிலும் கணிப்பீட்டுச் சிந்தனை தான்.


கண் விழித்தால் கற்பித்தல் உபகரணச் சிந்தனை உள்ளீடு, வெளியீடு,சுட்டிகள், மண்ணாங்கட்டிகள் என உள்ள கன்றாவிகள் அனைத்தையும் சுமக்கும் கழுதைகளாக ஆசிரிய வாழ்க்கை. சாப்பிட நேரமில்லை சந்தோசமாய் குடும்பத்தவர்களோடு சல்லாபிக்க நேரமில்லை சிவப்பு கோட்டுப் பயத்தினால் சுடுகுது மடியைப் பிடியென்ற சுடுதண்ணி வாழ்க்கை; எங்கள் வாழ்க்கை! சிரிக்க நேரம் இல்லை, சிந்திக்க நேரம் இல்லை உணர்வுகள் எல்லாம் மரத்துப் போய்விட்ட சொரணை கெட்ட வாழ்க்கைதான் எங்கள் ஆசிரிய வாழ்க்கை! 


அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள், அதிபர்களின் கெடுபிடிகள், அரசியல் வாதிகளின் அநாவசியத் தலையீடுகள் என ஆச்சினைகள் ஏராளம். ஐயகோ இறைவா! யாரிடம் சொல்லியழ – என்று துடித்தாள் துவண்டாள் இப்படி சொல்லியடங்கா வேதனைக்குள் எங்கள் ஆசிரியப் பயணங்கள்! “வாழ்க்கை என்பது ஒரு சில சிரிப்பொலிகளும் பல கண்ணீர்த் துளிகளும்”என்று கூறினான். அறிஞன் ஒருவன் இது எங்கள் ஆசிரிய வாழ்வுக்கு சாலப் பொருந்துகிறது.


அந்த ஒரு சில சிரிப்பொலிகள் கூடஎங்களுக்கில்லை ஏன்? நேரமில்லை, நேரமில்லை, நேரமில்லை சிரிப்பதற்கு நேரமில்லை சிந்திப்பதற்கு நேரமில்லை இயந்திர வாழ்க்கை என்புதோல் போர்த்த றோபோக்களாக எங்கள் வாழ்க்கை! சித்தி வீதம் சிதறினாலும் சம்பள ஏற்றம்  நிறுத்தம் இப்படியும் ஒரு அச்சுறுத்தலா?இது என்ன உலகம் ? எழுதி எழுதியே கைகள்


உணர்விழந்து போய்விட்டது- ஆனாலும் அடுத்த தலைமுறையின் தலையெழுத்தை எழுதிக்கொண்டிருக்கும்.எங்கள் விதியின் வரங்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன. எங்கள் தோள்கள் பாவப்பட்ட இந்த சமுதாயத்துக்காக துன்பச்சிலுவையை இன்னும் சுமந்துகொண்டுதான் இருக்கின்றன.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top