சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இறக்காமம் பிரதேசத்தில் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு காணப்பட்டது. இருந்த பொழுதிலும் குடியில் பேர் போன பலர் இறந்து போனதாலும் வயோதிபத்தை எட்டியதாலும் மது அருந்தும் பழக்கம் குறைவடைந்து இருந்தது.
அக்காலத்தில் மது அருந்தியவர்கள் ஊருக்கு வெளியே சென்று அருந்தி விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்காலத்தில் மதுப்பழக்கம் ஒரு பொது உடமை போல் இளைஞர்கள், மூத்தவர்கள், படித்தவர்கள் என பலராலும் சுவைத்துக் கொண்டாடப்படும் ஒரு செயற்பாடாக மாறியிருப்பது ஆச்சரியத்தை ஊட்டுகிறது.
இன்று (2023.02.07) இரவு 10 மணியளவில் இறக்காமம் பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் நிமித்தம் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இறக்காமம் குளக்கரை மைதானத்தின் பிரதான பாத்திருப்பு மண்டபத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டுமல்லாமல் இறக்காமல் புதிய மையவாடிக்கு அருகாமையிலும் ஜபல் கிராமத்தின் சில இடங்களிலும் இதில் அகப்பட்ட ஒருவர் உள்ளிட்ட இன்னும் வேறு பலரும் குழுக்களாகச் சென்று மதுப்பாவனையில் ஈடுபடுவதாகவும் குறித்த பிரதேச மக்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறு பொது இடங்களில் மது அருந்தி ஊருக்கும் இப்பிரதேசத்திற்கும் அவ கீர்த்தியை ஏற்படுத்தும் மானம் கெட்ட குடிகாரர்கள் இவற்றை மனதிலெடுத்து மதுவை விட்டகலவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
