- எஸ்.எம்.எம்.முர்ஷித் -
முஸ்லிம்களது வாகனங்களில் காணப்படும் அல்குர்ஆன்
வசனங்களுக்கெதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில போக்குவரத்துப் பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அவற்றை அகற்றுவதற்கான கால அவகாசங்களையும் வழங்கி வருவதாக தமது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான பிரதி பொலிஸ் மாஅதிபர் தம்மிக்க பெரேராவைத் தொடர்பு கொண்டு தமது அதிருப்தியினை வெளியிட்டதுடன், இவ்வாறான விடயம் தொடர்பில் அரசினால் எவ்வித சட்ட அறிவுறுத்தல்களும் இதுவரை முறையாக வழங்கப்படாத நிலையில், சிலர் நடைமுறைப்படுத்த முற்படுவது ஏற்புடையதல்லயெனவும் அலி ஸாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இங்கு குறிப்பிடப்படும் வாசகங்கள் முஸ்லிம் மக்கள் உயர்வாகவும், கண்ணியமாகவும், புனிதமாகவும் கருதுகின்ற அல்குர்ஆனிலுள்ள வசனங்களேயாகும். அவர்களது மார்க்க ரீதியான நம்பிக்கை சார்ந்த விடயங்களுக்கு அரசினால் எவ்விதத்தடைகளும் விதிக்கப்படாத நிலையில், மட்டக்களப்பில் இவ்வாறான புதிய நடைமுறையொன்று அமுலுக்கு வருவது தொடர்பில் உடனடியாக கவனஞ்செலுத்துமாறும் பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக் கொண்டார் .
அத்துடன், பெரும்பாலான மதங்கள் சார்ந்த போதனைகள், அம்மதங்கள் சார்ந்த முக்கிய கருத்துக்கள் பிற மொழிகளிலேயே காணப்படுகின்றன. உதாரணமாக பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ளவற்றைக் குறிப்பிடலாம். அதே போன்றே இஸ்லாமிய மத சார்ந்த விடயங்கள் அரபு மொழியில் காணப்படுகின்றன.
அவ்வாறானதொரு புனிதமான குர்ஆன் வாசகத்தையே சில முஸ்லிம்கள் தமது வாகனங்களில் பொறித்துள்ளனர். இவைகள் வன்முறைகளைத் தூண்டுவதாகவோ, நிந்தனை செய்வதாகவோ இல்லை. சாந்தி, சமாதானம், அன்பு, இறையச்சம் என்பவற்றைப் போதிப்பதாகவே இவையுள்ளன. இதனை அகற்றக்கோருவதும், அதற்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்க முயல்வதும் ஒரு பொருத்தமற்ற விடயமாகவே நான் கருதுகிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் உடன் கவனஞ்செலுத்துவதாகக் குறிப்பிட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தம்மிக்க பெரேரா, உடனடியாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும், இவ்வாறான சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றால், அது தொடர்பில் உடன் தனக்கு தெரியப்படுத்துமாறும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

