கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தர வேண்டும் என கோரிக்கையை முன்னிறுத்தி கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றுவந்த சத்தியாகிரக போராட்டம் ஒரு மாத அவகாசத்துடன் முடிவுக்கு வந்தது.
கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன் அவர்களுடன் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம், கல்முனை தமிழ் வர்த்தக சங்க தலைவர் லிங்கராஜா, ஆகியோரும் கலந்து கொண்டு கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப்போராட்டத்தில் இவர்களுடன் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்துகொண்டு இன்றுடன் ஏழு நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு நேற்றைய தினம் இவர்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு இப்போது சத்தியாகிரக போராட்டத்தையும் கைவிட்டுள்ளனர்.
இவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் அன்றைய தினம் முதல் இன்றுவரை முக்கிய பல பௌத்த தேரர்களும், முன்னாள்,இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இவர்களின் செயற்பாட்டை கண்டித்து கல்முனையில் முஸ்லிம் மக்களால் முன்னெடுக்கப்படும் சத்தியாகிரக போராட்டம் இன்றுடன் நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த சத்தியாகிரக பந்தலில் தமிழ் அரசியல் தலைமைகளின் செயல்களை கண்டித்து பல கண்டனங்களை முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தும் வருகிறார்கள். கல்முனை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து இரு சத்தியாகிரக பந்தலிலும், மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதால் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
தமது போராட்ட களத்தில் தமக்கு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்து தமது போராட்டத்தை ஒரு மாத கால அவகாசத்தை முன்நிறுத்தி இடைநிறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்ட எல்லோரும் அறிவித்தனர்.
நூருள் ஹுதா உமர்.




