எத்தகைய போராட்டங்களோ, அழுத்தங்களோ வந்தாலும் அதற்கு அடிபணிந்து நான் பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலகவேண்டும் என்றும், அவர்களை ஸ்ரீலங்கா அதிபர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும், பரவலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக இன்று மூன்றாவது நாளக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
எனினும், தாம் பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
“யாரும் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தலாம். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதில் யாருக்கும் தலையிட முடியாது. ஆனால் எந்தவகையிலும் குற்றவாளியாக நிரூபிக்கப்படாத ஒருவரை, பதவி விலகுமாறு கூறி போராட்டம் நடாத்துவது எந்த வகையில் நியாயம்?
அவர்களின் கோரிக்கையை ஏற்று நான் பதவி விலக மாட்டேன். அவ்வாறு நான் பதவி விலகும் எண்ணம் எனக்குக் கிடையாது” என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

