வெறுமனே உணர்வுகளால் உந்தப்படும் சமூகமாக முஸ்லிம் சமூகம் காணப்படுவது ஆபத்தானது. அறவே ஆங்கில அறிவற்றவர்களும் அரசியல் பின்புலம் கொண்டவர்களும் வாழும் இச்சூழலில் நடுநிலைமையாக அல்ஜெஸீராவின் நேர்காணலை அணுக முடியவில்லை என்பது தான் வாஸ்தவம்.
இலங்கை பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவின் மீட்பர் பணியை அன்று ஏற்ற நாம், இன்று ஏற்க மறுப்பது நடுநிலைமையற்ற செயல்.
ஆனால், அன்றைய சூழலில் மொட்டைத்தவிர முட்டுக்கள் ரணிலுக்கு இல்லாமல் போனது அவர்கள் சார்ந்து செயற்படக்காரணமானது என்பது அவர் பக்க நியாயம்.
புலிவாலைப்பிடித்தகதையாக பொருளாதார மீட்சியை ஏற்படுத்தி தானாக முன்வந்து சுமந்த ஜனாதிபதி பதவியை வெற்றிக்கொடி கட்டி தமது அரசியலை நிலைநிறுத்துவதா? அல்லது கைதுகள் விசாரணைகள் மீது கவனக்குவிப்பை மேற்கொண்டு இரு தரப்பு ஆதரவின்றி பொருளாதார மீட்சி மேற்கொள்ளாமல் தனது அரசியல் தோல்வியை ஏற்று தமது அரசியல் அஸ்தமனத்தை தழுவிக்கொள்வதா? என்ற கேள்விகளுக்கு முதன்மைத்தெரிவாக ஒரு பலம் பெரும் அரசியல்வாதியின் தெரிவாக எதுவாக இருக்கும் என்பது இங்கு ஆராயப்பட வேண்டும்.
அல்ஜெஸீராவின் நேர்காணலில் முந்தைய பகுதி ரணில் தன்பக்க வாதங்களை முன்வைக்கப்போதுமான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது செவ்வியைப்பார்க்கும் போது நிதர்சனம்.
ஆனால், பத்திரிகையாளர் என்ற வகையில் தனக்கான அசைன்மன்ட் ரணிலை குற்றவாளியாகக்காட்டுவதாக அமைய வேண்டுமென்றிருந்தால் அதற்கான உக்தியை மஹ்தி ஹஸன் பயன்படுத்தி ரணிலைக்கடுப்பேத்தி பிந்தைய பகுதிக்குள் இழுத்துச்சென்றதாகவே கருத வேண்டும்.
இந்த இடத்தில் ரணில் நிதானமிழந்தது ஒன்றும் புதிய விடயமல்ல.
ஆனால்,பிந்தைய பகுதிக்கான பதில்கள் ஓர் சராசரி சாமான்யனைப்பொருத்த வரையில் ரணில் பூசிமெழுகுவதாக இருந்தாலும் அரசியல் பரப்புக்குள் கவனமாக நழுவிச்சென்றதைக்காண முடியும்.
ஏனெனில், இலங்கையின் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலாகட்டும், அமெரிக்க இரட்டைக்கோபுரத்தாக்குதலாகட்டும், இந்திய புல்வாமா தாக்குதலாகட்டும் என ஆயிரம் நிகழ்வுகளுக்குப்பின்னாலுள்ள அரசியல் முடிச்சுக்கள் அவிழ்ந்ததாக வரலாறுகளில்லை.
எம்மைப்போன்ற கீழைத்தேய நாடுகளில் என்கவுன்டர்களால் அல்லது நிபுணத்துவ அறிக்கைகளோடு யாவும் முடிந்து விடும்.
ரணில் அரசு மட்டுமல்ல, இந்த அரசானாலும் எந்த அரசானாலும் குறித்த எல்லைக்கப்பால் செல்வது சூன்யப்பிரதேசமாகக் கானப்படும்.
இறுதியில் அல்ஜெஸீராவின் நேர்கானல் இலங்கையை போர்க்குற்றவாளியாகவும் தனிநாட்டுக்கோரிக்கையை நியாயப்படுத்த மாத்திரம் கூடுதல் குறியாக இருந்ததுடன், ஈஸ்டர் குண்டுத்தாக்குதலால் பாதிப்படைந்த முஸ்லிம் சமூகத்தின் நிவாரணம் குறித்த ஆழ்ந்த கேள்விகளை முன்வைக்காமை ஊடகவியலாளர் மஹ்தி ஹஸன், ரணில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அது சோனகப்பிரச்சினையாகக் காட்ட முனைந்ததை உணர்ந்து தான் ஓரு முஸ்லிம் என்ற வகையில் அதிலிருந்து நலுவி அடுத்த கேள்விக்குள் சென்றாரா?
அல்லது அவரது விவாதத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினை வலுப்படுத்த கண்துடைப்பாக ஈஸ்டர் தாக்குதல் குறித்த எழுந்தமாறான கேள்வியினை தொடுத்தாரா? என்ற கேள்வியும் இங்குள்ளது.
அல்ஜெஸீரா ஆங்கில வரிசை வேறுபட்ட நிகழ்ச்சி நிரலைக்கொண்டது என்பது ஆழ்ந்து நோக்கினால் புறியும்.
தற்போதைய அரசியல் சூல்நிலையில் நடந்தது அல்ஜெஸீரா விவாத மேடை என்பதை விட ரணில் - மஹ்தி ஹஸன் என்ற தோரணையில் முஸ்லிம் விரோதப்போக்காக சித்தரிக்கப்படுவதை நாம் கண்டுகொள்ளத்தவறியுள்ளோம்.
இதற்குமுன்னர் சனல்4, பீ.பீ.சி, த ஹிந்த் உள்ளிட்ட பல ஊடகங்கள் இலங்கையைக் குறிவைத்து தாக்கியபோதெல்லாம் அது ஊடகப்போராக மாத்திரமே சித்தரிக்கப்பட்டது.
இறுதியாக தோண்டத்தோண்ட பூதம் வரும் விடயத்தில் நடுநிலைமையாகப்பதிவிடுதலை விடுத்து கடந்தகால கசப்பான நிகழ்வுகளை மனதிற்கொண்டு பக்கசார்பாக பழிதீர்க்க நினைப்பது நீதியாக மாட்டாது.
ரணிலிடம் கேட்க ஆயிரம் கேள்விகளுள்ளது அப்போதெல்லாம் அவர் காந்தியவாதியாக மெளனிப்பார்.
-ஜுனைட் நளீமி