வடக்கு கிழக்கின் தமிழ் தேசியக் கட்சிகள் தேர்தல்களின் போது பேசிப் பிளைக்கும் 'சமஸ்டி' எனும் மூடு மந்திரம் பூச்சியத்தால் பெருக்கப்பட்டுள்ளது.

Dsa
0

 




கலாநிதி. றவூப் ஸெய்ன்


வடக்கு கிழக்கின் தமிழ் தேசியக் கட்சிகள் எதிர்பார்த்த ஒன்றும் இந்தத்தேர்தலில் நடைபெறவில்லை என்ற விடயத்தை தமிழ் மக்கள் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தை முடிவுகள் வலியுறுத்தியுள்ளன. இதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒட்டுமொத்த தமிழ் கட்சிகளும் வழங்கிவரும் மாறுபட்ட வியாக்கியானங்களுக்கு அப்பால்  புரிந்து கொள்ள வேண்டிய ஒரு கள உண்மை உள்ளது. 


அதாவது முஸ்லிம் தலைவர்கள் போலவே தமிழ் கட்சிகளும் வட்டாரத்தலைவர்களும் தேர்தல் ஊடாக சாதித்துக் காட்ட எண்ணிய ஒன்றும் ஈடேறவில்லை. இது எதிர்பாராவிதமாக நடந்ததல்ல.மறுதலையாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதனால் தமிழ்தலைமைகள் பேசி வரும் கற்பனாவாத தேசியவாதம் இலங்கையில் இனி எதிர்கொள்ளப்போகும் சவால் பாரியது. 


அரியநேந்திரனைக் களமிறக்கிய அணி வடக்கு கிழக்கில் உள்ள 14 லட்சம் வாக்குகளில் பத்து லட்சத்தைப்பெற்று தமிழ்மக்களின் லட்சியத்தில் பெரும்பான்மை தமிழ் மக்கள் ஒன்றுபட்டுள்ளனர் என்ற செய்தியை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு சென்று அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும் என்றே மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் அது ஈடேறவில்லை.


மொத்த வடக்கு கிழக்கில் இருந்தும் வெறும் 226 343 வாக்குகளையே அரியநேந்திரன் பெற்றுள்ளார். ஆக எதிர்பார்ப்பு பிழைத்துப்போயுள்ளது. மறுபுறம் எப்போதும் அரசாங்கங்களுடன் இருந்து அமைச்சர் பதவி வகித்து வந்த டக்ளஸ் அணி ரணிலின் தோல்வியுடன் அடங்கிப் போயுள்ளது. 


ஜே.வி.பி இலங்கையின் தமிழ்த் தேசியத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத கட்சி. இதுகாறும் அவர்கள் சமஸ்டி எப்படிப் போனாலும் வடக்கு கிழக்கு இணைப்பையே  அங்கீகரிக்காதவர்கள். அதனால்தான் இணைப்பு குறித்து தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள சஜிதுக்கு தமிழ் தேசியக்கூட்டணி ஆதரவு வழங்கியது.ஆனால் அவர்களும் எதிர்பார்த்தது நடக்கவில்லை.


இந்நிலையில்தான் கஜேந்திர குமார் பொன்னம்பலம் போன்ற தீவிர தமிழ் தேசியவாதிகள் தொடர்ந்தும் சமஸ்டி கோரிக்கையை அழுத்தி அழுத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்கின்றனர்.


 உண்மை என்னவெனில், இந்த அணிகள் எதுவுமே தமிழர் பிரச்சினையைத்தீர்த்து முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்காத ஒரு தீர்வை எட்டுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைந்து வருகின்றன. நடைமுறைச் சாத்தியமான ,முஸ்லிம் மக்களையும் உள்ளடக்குகின்ற ஒரு தீர்வுத்திட்டம் குறித்தே இனிவரும் காலங்களில் தமிழ் தலைமைகள் சிந்திக்க வேண்டும் என்ற செய்தியை இந்தத்தேர்தல் மிகப்பட்டவர்த்தனமாகவே பறைசாற்றி நிற்கிறது.


உடோபியன் வட்டத்திற்குள் மக்களை வைத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் தக்க வைக்க இதற்குமேல் சமஸ்டி பற்றிப் பேசுவதில் என்னதான் அர்த்தம் இருக்கப்போகிறது. அதுவும் வடக்கு கிழக்கு இணைப்பையே அங்கீகரிக்காத ஒரு ஆட்சியில்?

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top