(எஸ். சினீஸ் கான்)
வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டின் சுகாதார துறையின் பிரச்சினைகள் மாத்திரம் அல்ல.
மக்கள் உயிர் வாழ்வதற்கும் கூட முடியாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
அநுராதபுர மாவட்ம முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனம் நடத்திய இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ செயலமர்வு கடந்த 02.09.2023 ஆம் திகதி அநுராதபுரம் சீரிசீ வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வரலாற்றில் என்றும் இல்லாதவாறு மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டில் சுகாதார துறையின் பிரச்சினைகள் மாத்திரம் இன்றி மக்களுக்கு உயிர் வாழ்வதற்கும் கூட முடியாத நிலை காணப்படுகிறது.
சுகாதாரத்துறை எடுத்துக்கொண்டால் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவு, விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் வெளியேற்றம் என பிரச்சனைகளை அடிக்கிக்கொண்டே போகலாம். ஆசியா நாடுகளில் மருந்து கொள்வனவுக்கு அதிகம் நிதி ஒதுக்கும் நாடாக இலங்கை காணப்படுகிறது.
இந்த நிலையில் சுகாதார துறையில் பல பிரச்சினைகள் உள்ளன. இது மக்களின் உயிர் தொடர்பிலான முக்கிய பிரச்சினை. இதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு தீர்வுகளும் இல்லை. அரசாங்கத்தின் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் வழங்க வேண்டியுள்ளது.
எமது அரசாங்கத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவோம். பொருளாதாரம், சுகாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் தெளிவான கொள்கைகளை கொண்டு பயணிப்போம். நாட்டை கட்டியெழுப்ப சரியான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.
தவறான தீர்மானங்கள் எடுப்பதை நிறுத்த வேண்டும். சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க கூடாது. வறிய கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலைமை கண்டு ஆட்சியாளர்கள் கவலை அடைவதில்லை என்றார்.
அநுராதபுர மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்த “இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ செயலமர்வு” கடந்த (2023.09.02) ஆம் தினம் அநுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஏ.ஜி.நளீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இதில் வளவாளர்களாக கொழும்பு பல்கலைக்கழத்தின் சமூகவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி மஹீஷ்,இலங்கை பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் எம்.அஜிவதீன்,
ஜோர்தான் சர்வதேச இஸ்லாமிய மருத்துவ சங்க சம்மேளனத்தின் பயிற்றுநரும்,ஊக்குவிப்பு பயிற்றுநருமான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.இர்ஹாம் ஷரபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தேசிய தலைவர்களில் ஒருவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு,
சம்மேளனத்தின் தேசிய தலைவரும்,இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான சட்டத்தரணி லுக்மான் சஹாப்தீன்,முன்னாள் தேசிய தலைவர்களில் ஒருவரும்,தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளரும்,இலக்கியவாதியும்,சட்டத்தரணியுமான ரஷீத் எம் இம்தியாஸ், சம்மேளனத்தின் பிரதி தேசிய தலைவரும்,
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஷாம் நவாஸ், சம்மேளனத்தின் தேசிய செயற்திட்ட பனிப்பாளரும், IVAY பல்கலைக்கழகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பௌசர் பாரூக் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உயர்கற்கைகள் பிரிவுகளில் ஈடுபடும் 97 இளம் தலைவர்கள் ஆர்வத்தோடு இதில் பங்கேற்று பயன்பெற்றனர்.
சமூக மதிப்பீட்டாய்வு மூலம் சமூக மட்டத்திலான பிரச்சினைகளுக்கு கூட்டு தலைமைத்துவ ரீதியாக தீர்வு வழங்கல்,சூழலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் திறன்கள்,தலைமைத்துவ ஆற்றல் மேம்பாடு சார்ந்த விடயதானங்களை முன்னிலைப்படுத்தி விரிவுரைகளும்,பயிற்சிகளும் இதில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகவும்.