மக்களின் அவநம்பிக்கைக்குள்ளான நீதித்துறை இலங்கையில் உருவாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Dsa
0

 



முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா இந்நாட்டிலிருந்து வெளியேறிய என்னும் செய்தியானது நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளினை ஏற்படுத்தியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று(29.09.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


சட்டமா அதிபரின் அழுத்தம்

குருந்தூர் மலை வழக்கில் உண்மையினை நிலைநாட்டுவதற்காக நடுநிலையுடனும் நீதியுடனும் வழக்கினை விசாரித்து வந்த நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியமை என்பது அப்பட்டமாக இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மீது விழுந்த மற்றுமொரு கரும்புள்ளியாகும்.


குருந்தூர்மலை வழக்கில் தொல்பொருட் பிரதேசத்தில் நீதிமன்ற உத்தரவினை மீறி விகாரை கட்டுமானம் தொல்பொருள் பணிப்பாளரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள என அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கட்டளையாக்கியிருந்தது.


இந்நிலையில் இத் தீர்ப்பினை மாற்றியெழுத சட்டமா அதிபரினால் நீதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது எனும் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது.


குருந்தூர்மலை வழக்கு மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரங்களில் நீதியை நிலைநாட்ட உறுதித்தன்மையோடிருந்த நீதிபதி சரவணராஜா “தமிழ் நீதிபதி”என்று அடையாளமிட்டு நாடாளுமன்றத்தில் விமர்சிக்கும் பொழுதே இலங்கை நீதித்துறையின் சுயாதீனம் விமர்சனத்திற்குள்ளாகி விட்டது.


நீதிபதிகளின் பாதுகாப்பு 

அதேவேளை நீதிபதிக்குரிய பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதோடு, அவர் இலங்கை புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டார் எனும் செய்தியானது அப்பட்டமாக நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கியதோடு, நீதியையும் கேலிக்குரிய ஒன்றாக்கியுள்ளது.


இலங்கையில் நடந்தேறிய இச் சம்பவங்கள் நீதித்துறைச் சுயாதீனத்தில் ஒரு அங்கமான நீதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வியினை தோற்றுவித்துள்ளதோடு, நீதிமன்றச் செயற்பாடுகளில் அரசியல் மற்றும் புற காரணிகளின் அழுத்தம் தொடந்தும் இருக்கின்றமையினையும் உறுதிசெய்கின்றது.


தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இச் சம்பவம் ஒரு விடயத்தினை சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றது. அதாவது தமிழ்மக்கள் மீது நடந்த இனப்படுகொலைக்கான நீதி இலங்கை நீதித்துறையால் சாத்தியப்படாது என்பதுவேயாகும்.


தமிழ் மக்கள் உள்ளக விசாரணையையும் நீதிப் பொறிமுறையையும் நம்பமுடியாது என்பதை இது உறுதி செய்கின்றது, இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிக்கு இது மேலும் வலுச்சேர்க்கின்றது. இங்கு தமிழ்மக்களிற்கு ஏற்பட்ட பாதிப்பை விட, நீதித்துறைக்கு பாரிய அநீதி நிகழ்ந்துள்ளது.


இவ்வாறான சூழலில் தான் இலங்கை அரசாங்கம் உலக நம்பிக்கையை வென்றெடுக்கப் போகின்றது.


இங்கு தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தலுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட நீதிபதி ரி.சரவணராஜா அவர்களிற்குரிய நீதியையும் நிவாரணத்தை வழங்கவும் நீதித்துறையில் சுயாதீனத்தன்மையினையும் நம்பகத்தைன்மையை உறுதி செய்ய வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top