நடிகை சித்ராவின் வழக்கில் திடீர் திருப்பம்

 


சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற கோரி  சித்ராவின் தந்தை  ஐகோர்ட்டில் மனு  தாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

 சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். 

சித்ராவின் மரணம் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டும்கூட, விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. 

மேலும் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார். 

2021-ம் ஆண்டில் இருந்தே இந்த வழக்கு, குற்றச்சாட்டை பதிவு செய்யும் கட்டத்திலேயே இருக்கிறது.

முதுமை காரணமாக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த வழக்கில் சாட்சியாக இருக்கக்கூடியவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருப்பதால், சித்ராவின் வழக்கை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section