சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் முன்வரவேண்டும் : கிழக்கின் கேடயம் கோரிக்கை

 



நூருல் ஹுதா உமர் 


தான் சார்ந்த துறை சார்ந்தவர்கள் அநீதியை சந்திக்கும் போது தொழிற்சங்கங்கள் முன்வந்து குரல்கொடுப்பது  போன்று இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் வஞ்சிக்கப்பட்டு, அநீதிக்கு ஆளாகும்போது இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பது கவலையளிப்பதாகவும் நிர்வாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு வரும் கிழக்கு மாகாண சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் முன்வரவேண்டும் எனவும் கிழக்கின் கேடயம் கேட்டுக்கொண்டுள்ளது. 


கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், கல்வி சார்ந்த ஆசிரியர்கள், அதிபர்கள் பாதிக்கப்படும் போது ஆசிரியர் சங்கங்களும், அதிபர் சங்கங்களும் போர்க்கொடி தூக்குவது போன்று, நாட்டிலுள்ள ஏனைய ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் சார்ந்த தொழிற்சங்கங்கள் அல்லது அமைப்புக்கள் முன்வந்து அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி அவர்களுக்கு நீதியை பெற்று கொடுக்கின்றனர். 


ஆனால் நாட்டின் முக்கிய நிர்வாகத்துறை சார்ந்த  இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கங்கள் கிழக்கு மாகாணசபை உட்பட ஏனைய மாகாண சபைகளிலும் சரி, தேசிய ரீதியாகவும் சரி முஸ்லிம்  இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் பாரபட்சமாக நடத்தப்படுவதையும், அவர்களுக்கு உரிய இடங்கள் வழங்கப்படாமையையும், சகல தகமையும் கொண்ட சிரேஷ்ட அதிகாரிகள் இருக்கத்தக்கதாக கனிஷ்ட அதிகாரிகள் முக்கிய உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்படுவதையும் கண்டும் காணாதது போல மௌனமாக இருப்பது கவலையளிக்கிறது. 


கிழக்கு மாகாண சபையிலும், தேசிய ரீதியாகவும் முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகள் கடுமையான மனவுளைச்சலுடன் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களுக்கு  இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் முன்வந்து நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section