ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் : சிவஞானம் சிறிதரன்

 


இலங்கைத் தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகமான அறிவகத்தில் இன்று (03-06-2023) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அவர் தொடந்து கருத்து தெரிவிக்கும் போது, நேற்றைய தினம் (02.06.2023) நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மருதங்கேணிப் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் இன அழிப்பு நடவடிக்கையின் புதிய வடிவத்தையே காட்டி நிற்கின்றது.


அதியுச்ச அடக்குமுறை

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை கொன்றொழித்து படுகொலைகளை செய்த ஜேர்.ஆர்.ஜெயவர்தனவின் மருமகனான ரணில் அரசின் இந்த செயற்பாடானது இந்த நாட்டிலே அதியுச்ச அடக்குமுறையையே காட்டி நிற்கிறது.


இதேவேளை இந்த நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி திணைக்களத்திலே பதிவு செய்து தங்களுடைய உழைப்பு வருமானங்களுக்கு வருடாந்தம் வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.


ஒரு நாட்டிலே வரி அளவிடுவது என்பது மிக நல்ல விடயம்.


ஆனால் ஒரு நான்கு வயது தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை சுயமாக பாடசாலைக்கு சென்று கல்வி கற்க முடியாத, அதாவது பருவகாலச் சீட்டை பெற்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணம் செய்து தமது கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது.


மேலும் ஒரு மாணவனின் கல்வி நடவடிக்கைகளில் ஒரு வசதியை செய்து கொடுக்காத இந்த அரசாங்கம், 18 வயதிற்குப் பின்னர் அவர்களிடமிருந்து வரியை அறவிடுவது என்பது மிக மோசமான நிலைமையை காட்டி நிற்கின்றது.


ஊழல் மோசடி 

இந்த அரசாங்கத்தில் பலர் பல்வேறுபட்ட மோசடிகளை செய்து போயிருக்கின்றார்கள்.


மத்திய வங்கியில் பல மில்லியன் கணக்கிலே கொள்ளையடித்து சென்றவர்களை இதுவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாத இந்த அரசாங்கம்.


சீனியிலும் தேங்காய் எண்ணெயிலும் ஊழல் மோசடி செய்த கோட்டாபய குடும்பத்தை கைது செய்து விசாரணை செய்யவும் திராணியற்ற ரணில் அரசாங்கம்.


இங்கே பல ஊழல்களில் ஈடுபட்டு விடுதலைப் புலிகளிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளிலே வைப்பிலிட்டு வைத்திருப்பவர்களுக்கு இதுவரையும் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை.


நீதியான ஆட்சி

இருபது தலைமுறைகளுக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துவிட்டு இருக்கின்ற மகிந்த ராஜபக்ச குடும்பத்தை விசாரிக்கவும் இந்த அரசாங்கம் இன்று தயாராக இல்லை.


இந்த நாடு எப்பொழுதும் கொள்ளையடித்தவர்கள் களவெடுத்தவர்களினுடைய பக்கத்தில் தான் நிற்கின்றது.


இந்த தீவில் ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section