புங்கை மரம் மருத்துவ பயன்கள் :

 


புங்கை அல்லது புங்கு அல்லது பூந்தி அல்லது சுரஞ்சகம் (Millettia pinnata) என்னும் இத்தாவரம் பட்டாணி சார்ந்துள்ள பேபேசியேக் குடும்பத்தைச் சார்ந்தது. இது வெப்பமண்டலப் பகுதிகளான ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. 


வீட்டின் முன்பு இருக்க கூடியது புங்க மரம். இது அடர்ந்த பசுமையான இலைகளை உடையது. பூமிக்கு சத்துக்களை தரக்கூடியது. இதன் இலைகள் புற ஊதா கதிர்களை தாங்கி நிழலை தரக்கூடியது. நல்ல சுத்தமான காற்றை கொடுக்கவல்லது. வீட்டுக்கு உள்ளே செல்ல கூடிய நச்சுகிருமிகளை தடுக்க கூடியது. புங்க மரத்து இலைகள், காய்கள், பூ, வேர், பட்டை ஆகியவை மருந்தாக பயன்தருகிறது. 


ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 


புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை.


புங்கை மரப் பட்டை பயன்கள்:


புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை -இவை மூன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.


புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.


புங்கை இலை பயன்கள்:


புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது.


புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.


புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும். 


புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும். 


புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்.


புங்கமரத்தின் பால் புண்களையும், வாய்வையும் நீக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு பொன்போன்ற நிறத்தைக் கொடுக்கும்.


புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம்.


புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும். 


புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணமாகும்.. 


புங்கன் இலையை அரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடால் நிவாரணம் உண்டு.. 


இலைகளின் சாறு, இருமல், வாயுக்கோளாறு, அஜீரணம்,பேதி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.கஷாயம் பெரி-பெரி நோயை குணப்படுத்தும். 


புங்கன் இலை, புளியிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பிலை, பொடுதலை, உத்தாமணி, கறிவேப்பிலை, நாரத்தை இலை, சங்கச்செடி இலை, அவுரி இலை, பொன்னாவாரை இலை இவைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு கொதிக்க வைத்து அதில் கடுகுரோகிணி, இந்துப்பு இவற்றை துணியில் சிறு பொட்டலங்களாகக் கட்டி கொதிக்க வைத்த நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கியவுடன் வடிகட்டி மாந்த நோய்களுக்கு கொடுத்து வந்தால் மாந்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.


புங்க மரத்தின் இலைகள் ஆஸ்துமா, நெஞ்சக கோளாறுகளுக்கு மருந்தாகிறது. சீயக்காயுடன் புங்க காய் சேர்த்து பயன்படுத்தலாம். 


புங்க இலையை பயன்படுத்தி உடல், தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். புங்க இலை, மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டிய பின், துணியில் எடுத்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவவும். தலையில் பொடுகினால் அரிப்பு இருந்தால் இதை தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால், அரிப்பு சரியாகும். 


புங்க இலை தோலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. தோல் மென்மை தன்மை அடைகிறது. அக்கி புண்கள், அம்மை கொப்பளங்கள் சரியாகிறது. 


புங்க இலையுடன் மஞ்சள் சேர்த்து தேனீராக்கி குடிப்பதன் மூலம் பசியின்மை, ஈரல் வீக்கம் சரியாகும். ஈரல் நோய்களுக்கு மருந்தாகிறது. 


புங்க எண்ணெய் பயன்கள்:


புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்புடன் பளபளக்கச் செய்யும். தினமும் உடலில் புங்க எண்ணெய் தடவி வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.


புங்க எண்ணெய், பரங்கி பட்டை சூரணம் ஆகியவற்றை தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை பூசினால் சொரியாசிஸ் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும்.


புங்க எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதை மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ள இடங்களில் தடவி சுமார் ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் வலி சரியாகும். 


புங்க எண்ணெய், வாத நீரால் ஏற்படும் வீக்கத்தை சரிசெய்யும். மூட்டு வலிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. நெஞ்சின் மீது பூசுவதால் நெஞ்சக சளி, இருமல் குறைகிறது.


தீக்காயம், நாள்பட்ட ஆறாத புண்கள், வடுக்கள், தழும்புகள், கரப்பான் நோய்கள், சொரி, சிரங்கு இவற்றிற்கு புங்க எண்ணெயை லேசாக சூடாக்கி அவற்றின் மீது பூசி வர மேற்கண்ட நோய்கள் அனைத்தும் தீரும்.


புங்கம் வேர் பயன்கள்:


புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.


புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும். 


புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும். 


புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, ஒரு மெல்லிய துணியில் நனைத்து, பிளவை, ஆறாத புண்கள், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவிவந்தால் புண்கள் எளிதில் ஆறும்.


புங்கம் பூ பயன்கள்:


இதன் மலர்கள் நீரிழிவு நோய்க்கு மருந்தாகும். நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம். 


புங்கன் பூவை தேவையான அளவு எடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடி செய்து அரை அல்லது 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும்.இதை எடுத்துக் கொள்ளும் நேரம் மட்டும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை நீக்க வேண்டும்.


பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும். 


புங்கம் பூ, புளியம்பூ, வசம்பு, சின்ன வெங்காயம், சீரகம், வெட்பாலை அரிசி, நன்னாரி என வகைக்கு 35 கிராம் எடுத்து 3/4 லிட்டர் பாலில் கொதிக்க வைத்து 1 லிட்டர் புங்க எண்ணெய் விட்டு காய்ச்சி கரப்பான், நாள்பட்ட ஆறாத புண்கள் மீது தடவினால் அவை எளிதில் குணமாகும்.


புங்கன் விதை பயன்கள்:


இதன் விதைகளின் பொடி கக்குவான் இருமலுக்கு நல்லது. எண்ணெய் அஜீரணத்துடன் கூடிய ஜுரத்தை குணப்படுத்தும். 


தோல் நோய்களுக்கு புறப்பூச்சு மருந்தாகப் பயன்படும். புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம். 


சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். 


இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும். வேரில் எடுக்கப்படும் சாறு ஆழமான புழுவைத்த புண்களை ஆற்றும், 


மேலும் பற்களை சுத்தப்படுத்தவும்,ஈறுகளை வலுப்படுத்தவும் பயன்படும். 


அரை ஸ்பூன் புங்க விதை பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் மூட்டு வலி, வீக்கம் சரியாகும். 


புங்கின்விதை காற்கிரந்த புண்கரப்பான் காதெழுச்சி


அங்கசன்ன கண்ணோய்க்கும் ஆம்பேதி-யுங்கட்கும்


காட்டுப்புங் கின்விதைக்கு கண்டதே மற்சொறிமேய்ப்


பூட்டுப்பங் கின்வாய்வும் போம்


- அகத்தியர் குணபாடம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section